“டிஆர்பி ரேட்டிங் சிஸ்டம் ஒரு காலாவதியான அம்சம்” – நாடாளுமன்ற குழுவிடம் பரிந்துரை!

புதுடெல்லி: சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் சிஸ்டம் என்பது மோசடி செய்யத்தக்கது என்றும், அதுவொரு காலாவதியான அம்சம் என்றும், அதில் அறிவியல்பூர்வமான அம்சம் இல்லை என்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், பிரசார் பாரதி மற்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

டிஆர்பி என்பது ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை, பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பது குறித்த மதிப்பீடு அல்லது கணக்கீடாகும்.

பிரசார் பாரதி அமைப்பின் முதன்மை நிர்வாக இயக்குநர் சஷி ஷேகர் வேம்பதியும் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“டிஆர்பி என்பது ஒரு வலுவான அமைப்பல்ல மற்றும் அது காலாவதியான ஒன்று” என்று ஐடி பேனலில் உறுப்பினராக இருக்கும் ஒரு பெயர் தெரிவிக்க விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.