ஐதராபாத்: கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தன்னிச்சையாக  செயல்படுகிறார் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி குற்றம்சாட்டி உள்ளது.

தெலுங்கானாவில் அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தொடக்கம் முதலே கொரோனா தொற்று பற்றி மாநில மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள், மருத்துவர்களிடம் கொரோனா நிலவரம் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார்.

இது தவிர, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனிடம் சமீபத்தில் எடுத்துரைத்தார்.

கொரோனா தொற்று வேகமாக அதிகரித்தாலும் சோதனைகள் அதிகளவு மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

இந் நிலையில், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தன்னிச்சையாக  செயல்படுகிறார் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து அக்கட்சி கூறி இருப்பதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிக்காமல், தன்னிச்சையாக கவர்னர் செயல்படுவது நல்லதல்ல.

கொரோனா நோய் தொற்றை தடுப்பதில் மாநில அரசு தீவிரமாக முழுவேகத்துடன் செயல்பட்டு வரும் நிலையில் மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் கவர்னர் தமிழிசை, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தனியாக ஆய்வுகள் செய்வது சரியல்ல என்று குறிப்பிட்டுள்ளது.