ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில், தெலுங்கானாவைச் சேர்ந்த வீரர்கள் யாரும் இடம்பெறாதது குறித்து, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வீரர் யாரும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ தனம் நாகேந்தர் கூறியுள்ளதாவது, “ஹைதராபாத் நகரைச் சேர்ந்த எந்த ஒரு வீரரையும் சன்ரைசர்ஸ் அணி சேர்க்கவில்லை. உள்ளூரைச் சேர்ந்த எந்த வீரரையும் சேர்க்காமல் சன்ரைசர்ஸ் அணி விளையாடினால், ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு இடையூறு செய்வோம்.

ஒவ்வொரு அணியிலும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இந்த நகரைச் சேர்ந்த பல திறமைவாய்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்படாமல் இருக்கிறார்கள். தேர்வு முறையில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அந்தப் பதவிக்கே தகுதியில்லாதவர். பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தண்டனை பெற்றவர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சிராஜ் உலக அரங்கில் எவ்வாறு பார்க்கப்பட்டார் என்பதை அறிந்தோம். சிராஜ்ஜைப் போன்ற திறமைவாய்ந்த பல வீரர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்குச் சரியான தளம் கிடைக்கவில்லை. ஆனால், சன்ரைசர்ஸ் அணி அதுபோன்ற வீரர்களை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. சன்ரைசர்ஸ் அணியில் இருக்கும் ஹைதராபாத் எனும் பெயரை நீக்கிவிடட்டும்” என்றுள்ளார் அவர்.