தெலங்கானா முன்னாள் அமைச்சர் கொண்டா சுரேகா காங்கிரசில் இணைந்தார்…

--

டில்லி:

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கொண்டா சுரேகா  தனது கணவருடன்  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவையில் போட்டியிட வாய்ப்பு மறுத்ததால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் அடுத்த சட்டப்பேரவை பொதுத்தேர்தல், 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் நடைபெற இருந்தது. ஆனால், தேர்தலை முன்கூட்டியே  சந்திக்க எண்ணிய முதல்வர் சந்திரசேகர ராவ்,  அமைச்சரவையை ராஜினாமா  செய்ய வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி  உள்ளார்.

தெலுங்கானாவில், சந்திரசேகர ராவுக்கும் பாஜக தலைமைக்கும் இடையே ரகசிய கூட்டணி இருப்பதாக கருத்து நிலவுகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில்,  மக்களவை தேர்தல் நெருங்குகையில் கூட்டணி குறித்தோ அல்லது பாஜக ஆட்சி அமைக்கும் சமயம் வெளியில் இருந்தோ ஆதரவளிப்போம் என டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் கூறியதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

அதையொடியே  டிசம்பர் மாதத்தில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத்தேர்தலுடன் தெலுங்கானா தேர்தலையும் நடத்த கேசிஆர் (சந்திரசேகர ராவ்) கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில்,  முன்னாள் சட்டப்பேரவை அவைத்தலைவராக இருந்து, மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுரேஷ் ரெட்டி, கேசிஆரின் மகனும் அம்மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராமா ராவ் முன்னிலையில் டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில்,  வாரங்கல் கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கொண்டா சுரேகா டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் தனது கணவருடன்  இணைந்தார். சரேகாவின் கணவர் கொண்டா முரளி ஏற்கனவே எம்எல்சியாக இருந்தவர்.

வர உள்ள சட்டமன்ற தேர்தலில் கொண்டா சுரேகாவுக்கு வாய்ப்பு வழங்க மறுத்தை தொடர்ந்து, அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்  ராகுல் காந்தியை சந்தித்த பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் சுரேகா. அவருடன்  தெலங்கானா பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர்களான உத்தம குமார் ரெட்டி மற்றும் பொன்னல லட்ச்சியா போன்ற தலைவர்களும் காங்கிரசில் சேர்ந்தனர்.

தெலுங்கானா மாநிலம் உருவானபோது, மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசிய சந்திரசேகர ராவ், தற்போது அதை  ஒதுக்கி வைத்து, அவரது குடும்பத்தின் நலனில் கவனம் செலுத்தி வருவதாக, ஊடகங்களுக்கு பேட்டியளித்த சுரேகா குற்றம் சாட்டினார்.

இவர் ஏற்கனவே  கடந்த 1999 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.