கர்நாடகாவைப் போல் தெலுங்கானாவில் பாஜக விளையாட முடியாது : டி ஆர் எஸ் கட்சி எச்சரிக்கை

தராபாத்

ர்நாடகாவில் பாஜக விளையாடியதைப் போல் தெலுங்கானாவில்  நடக்காது என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவர் ராமராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்யும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி ஆர் எஸ்) கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா, “தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனக்கும் தனது குடும்ப நலனை மட்டுமே யோசித்துச் செயல்படுகிறார்.

அதனால் தான் அவர் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்னும் மக்களுக்கு நலன் அளிக்கும் மருத்துவ காப்பிட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. அது  மட்டுமின்றி காலேஸ்வ்ரம் நீர்ப்பாசன திட்டத்தில் டி ஆர் எஸ் அரசு தேவையில்லாமல் திட்டச் செலவை அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இது டி ஆர் எஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் கே டி ராமராவ், “தெலுங்கானா அரசின் உலகின் மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டத்துக்கு மத்திய அரசு எவ்வித உதவியும் அளிக்கவில்லை. மாறாக அதில் ஊழல் உள்ளதாகத் தெரிவிக்கிறது.

நீங்கள் இந்த திட்டத்தில் ஊழல் இருப்பதாகச் சொல்லும் முன்பு மத்திய அரசு  அதிகாரிகள் மீதுள்ள ஊழல் புகார் குறித்து சோதனை செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் ஊழல் இருக்கும் என நீங்கள் எண்ணினால் அதற்கான ஆதாரங்களை அளியுங்கள்.

அரசின் விவசாய நலத் திட்டம் தெலுங்கானா அரசின் விவசாய நலத் திடத்தின் அடிப்படையில் உருவானதாகும். அதைப் போல் ஜலசக்தி திட்டமும்  தெலுங்கானாவின் மிஷன் பகீரதா திட்டத்தின் மறு பதிப்பு ஆகும். சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 119 இடங்களில் போட்டியிட்டு 103 இடங்களில் டெபாசிட் இழந்ததை மறக்கக் கூடாது.

கர்நாடகாவில் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தூண்டி விட்டு  பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அதைப்போல் தெலுங்கானாவில் விளையாட முடியாது. அங்கு கூட்டணி ஆட்சியைக் கலைத்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது போல் தெலுங்கானாவில் நடக்காது. இங்குள்ள மக்கள் புத்திசாலிகள் என்பதை பாஜக மறக்கக் கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.