சரக்கு லாரி மோதி தடம்புரண்ட ரயில் பெட்டிகள் – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

மத்திய பிரதேசத்தில் சரக்கு லாரி மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்டது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் சென்ற பயணிகள் உயிர்தப்பினர்.

coaches

மத்தியப்பிரதேச மாநிலம் கோத்ரா-ரத்லம் இடையே உள்ள லெவல் கிராசிங் வழியாக இன்று காலை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுக்கொண்டிருந்தது. லெவல் கிராசிங்கின் கேட் மூடப்பட்டு, பிற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லெவல் கிராசிங் கேட்டை உடைத்துக்கொண்டு அவ்வழியாக வந்த ரயில் மீது பலமாக மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. எனினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர். லாரியின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியதால் அதன் ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த வழிப்பாதையில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.