வாகா

பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியதால் வாகா எல்லையில் வசிக்கும் வர்த்தகர்கள் வருமானமின்றி கடும் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர்.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது வாகா – அட்டாரி பகுதியாகும். இந்த பகுதி மூலம் பாகிஸ்தானுக்குப் பொருட்கள் எடுத்துச் செல்வதும் அங்கிருந்து கொண்டு வருவதும் நடந்து வந்தது. இந்த பகுதியில் பல சரக்கு வாகனங்கள் மற்றும் வாகன  நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அத்துடன் ஏராளமான வர்த்தகர்கள் எல்லையில் உள்ள இந்திய மக்களுக்குப் பாகிஸ்தான் பொருட்களை விற்றும் பாக் மக்களுக்கு இந்தியப் பொருட்களை விற்றும் பிழைப்பு நடத்தி வந்தனர்.

மத்திய அரசு விதி எண் 370ஐ நீக்கம் செய்து காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. லடாக் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதையொட்டி பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை முறித்துக் கொண்டது. அத்துடன் பாகிஸ்தான் – இந்தியா இடையில் ஓடிக்  கொண்டிருந்த சம்ஜவுதா ரெயிலை ரத்து செய்தது. இந்த நடவடிக்கைகளால் பாகிஸ்தானில் அத்தியாவசிய பண்டங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டு மக்கள் தவிப்பதாகச் செய்திகள் வந்தன.

அதே நேரத்தில் இந்திய எல்லையில் உள்ள பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டதால் இங்குள்ள  வர்த்தகர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சரக்கு வாகன நிறுவனங்களும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்குத் தொழில் மற்றும் வர்த்தகம் அடியோடு நின்று விட்டதால் தினசரி உணவுக்கும் தவிக்கும் நிலை உண்டாகி இருக்கிறது.

இது குறித்து அப்பகுதி சரக்கு வாகன சங்க நிர்வகி அமர்ஜீத் சிங் சிந்தா, “புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசு கடும் வரி விதித்ததால் இங்கிருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்வது பாதிக்கப்பட்டது இந்நிலை ஒருநாள் முடிவுக்கு வரும் என்னும் நம்பிக்கையில் நாங்கள் காத்திருந்தோம். அந்த காலகட்டத்தில்  நாங்கள் பாகிஸ்தானில் இருந்து இங்குப் பொருட்களை எடுத்து வந்து எங்கள் பிழைப்பை நடத்தி வந்தோம். தற்போது பாகிஸ்தான் அனைத்து வித்தத்துக்கும் தடை விதித்துள்ளது. நாங்கள் இப்போது என்ன செய்வது? எங்கு செல்ல முடியும்?

எங்களைப் போன்ற சரக்கு வாகன நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் துயரம் குறித்துப் பேச யாரும் கிடையாது. எங்களைப் போல் இங்குள்ள சிறு வர்த்தகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகா எல்லையில் 10000 குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமெங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இல்லை எனில் நாங்கள் எங்கள் வாழ்விடத்தை விட்டுப்  பிழைப்புக்காக வேறு எங்காவது செல்ல நேரிடும். ஏற்கனவே நாடு உள்ள நிலையில் நாங்கள் வேறெங்கு சென்றாலும் பிழைப்பு நடத்த முடியாது என்பதே உண்மையாகும்” எனத் தெரிவித்துள்ளார்