வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கணக்குகளை முடக்க முடியாது என்று டுவிட்டர் சமூக வலைதளம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘உலகளவில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை டுவிட்டர் வழங்கி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கருத்துகள், சமூகத்தில் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

எனவே, உலகத் தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்குவதோ, அவர்களது கணக்குகளை முடக்குவதோ முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை மக்களிடம் கொண்டுச் சென்று, அவைகுறித்த விவாதத்தைத் தொடங்குவதற்காகான வாய்ப்பைப் பறித்துவிடும் ’’ என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தாக்கி அழிப்பதற்கான அணு ஆயுதங்களும், அந்த ஆயுதங்களை அமெரிக்கா வரை ஏந்திச் செல்லக் கூடிய ஏவுகணைகளும் இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் கூறினார். ஆயுதங்களை இயக்கக் கூடிய கட்டுப்பாட்டு விசை தனது மேஜையில் எப்போதும் தயாராக இருப்பதாக எச்சரித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தனது டுவிட்டரில்,, ‘‘எனது மேஜையிலும் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு விசை எப்போதும் தயாராக இருக்கிறது. அது கிம் ஜோங்- உன்னிடம் இருப்பதைவிட மிகவும் பெரிதானது. அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதக் கட்டுப்பாட்டு விசை’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆணு ஆயுதத் தாக்குதல்கள் குறித்த மிரட்டல்களை சமூக வலைதளங்கள் மூலம் உலகத் தலைவர்கள் பரிமாறிக் கொள்வது குறித்த சர்ச்சை எழுந்தது.

பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் வெளியிடும் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், அவரது கணக்கை முடக்க வேண்டும் என்றும் டுவிட்டர் நிறுவனத்திடம் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இதன் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.