எச்1பி விசா விதிமுறையில் தளர்வு! அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம்…

வாஷிங்டன்:  எச்1பி விசாவுக்கு அமெரிக்க அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது அதில் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த 2017ம் ஆண்டு  ஜனவரி 31ந்தேதி அமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு இறுதி வரை விசா தடை உள்ளது. இதன் காரணமாக  இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு உண்டாகும்  நிலை ஏற்பட்டது.

டிரம்பின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,   174 இந்தியர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுமீதான விசாரணை கொலம்பியா  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது எச்-1பி விசா நடைமுறையில் சில மாற்றங்களை டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி,  கடந்த ஜூன் 22ல் எச்1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதிக்கப்பட்ட நிலை யில் அமெரிக்கா தளர்வு அறிவித்துள்ளது. ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம்.

ஏற்கனவே தாங்கள் வகித்த வேலையில் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதாக இருந்தால் மட்டுமே அமெரிக்கா திரும்பலாம் என்றும்,  எச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.