ஈரான் மீது அமெரிக்கா நடவடிக்கை….கச்சா எண்ணெய் விலை ஒரு பாரல் 120 டாலராக உயரும் அபாயம்

வாஷிங்டன்:

ஈரானிடம் எரிபொருள் இறுக்குமதி செய்வதை முற்றிலும் நிறுத்தும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டால் கச்சா எண்ணெய் விலை ஒரு பாரல் 120 டாலராக அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

ஈரானிடம் எரிபொருள் இறக்குமதி செய்வதை நிறுத்தும் முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசு இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை செய்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பாரலுக்கு 120 டாலராக உயரும் என்று பாங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் 4வது எரிபொருள் உற்பத்தியாளரான ஈரான் மீது பொருளாதார தடை விதித்தால் ஒரு பாரல் கச்சா எண்ணெய் விலை 50 டாலர் வரை உயரும். இது இந்த ஆண்டின் விலையில் 25 சதவீத அதிகரிப்பாக இருக்கும். சர்வதேச பங்கு சந்தையில் தற்போது ஒரு பாரல் 77 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்த வாரத்தில் இந்தியா, தென் கொரியா போன்ற நாடுகள் ஈரானிடம் இருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம் சவுதி அரேபியா உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல்களாக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. சவுதி அதன் உத்தரவாதத்தை கடைபிடிக்கலாம்.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அதிகாரின் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஒரு மாதத்தில் நாள் ஒன்றுக்கு 1 கோடி பாரல்கள் மட்டுமே சராசரியாக பம்ப் செய்யப்பட்டுள்ளது. ஈரானின் உற்பத்தியை பிற நாடுகள் மூலம் எளிதில் மாற்றி அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.