சியோல்: இரு கொரிய நாடுகளுக்கும் இடைபட்ட ராணுவமயமற்ற பகுதியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இது முன்னேற்பாடு செய்யப்படாத திடீர் நிகழ்வாகும்.

இரு கொரிய நாடுகளுக்கு இடைபட்ட இந்த ராணுவமயமாக்கப்படாத பகுதிதான், வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளையும் பிரிக்கிறது. இப்பகுதியில் சந்தித்துக்கொண்ட இரு தலைவர்களும் கைகுலுக்கியதோடு, வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இருநாடுகளின் எல்லைக்குள்ளும் சிறிதுதூரம் நடந்தனர்.

இந்தப் பகுதிக்கு வருகைதந்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டுமே. “இப்பகுதியில் வருகைதர வாய்ப்புக் கிட்டியது எனக்களிக்கப்பட்ட கெளரவம் என்றும் இது உலகிற்கான ஒரு சிறந்த நாள்” என்றும் கூறினார் டிரம்ப். இந்த சந்திப்பில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னும் கலந்துகொண்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிவிட்டரில் அழைப்பு விடுத்ததையடுத்து இந்த சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்துக் கொள்வது இது மூன்றவாது முறை.

முதல் சந்திப்பு சிங்கப்பூரிலும், இரண்டாவது சந்திப்பு வியட்நாமிலும் நடைபெற்றது. ஆனாலும், அந்த சந்திப்புகள் தோல்வியிலேயே முடிந்தன. வடகொரியாவின் அணுஆயுதங்கள் தொடர்பான பிரச்சினையே தலையாயப் பிரச்சினையாக சம்பந்தப்பட்ட நாடுகளிடையே நிலவி வருகிறது.

[embedyt]https://youtu.be/DuiLcTZZaEw[/embedyt]