வாஷிங்டன்: சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்துடன் தொடர்புடைய மாணாக்கர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதில்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இதன்மூலம், அமெரிக்காவிலிருந்து அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்பத்தை பெறுகின்ற சீனாவின் முயற்சிகளை முறியடிக்க முடியும் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.
சீனா – அமெரிக்கா இடையே தொடரும் வர்த்தகப் போர், கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த பிரச்சினை, ஹாங்காங்கில் சீனாவின் நடவடிக்கை, தென்சீன கடலில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் போன்ற நிகழ்வுகளின் போக்கில், இந்த அறிவிப்பு அமெரிக்காவிடமிருந்து வெளியாகியுள்ளது.
“அமெரிக்காவின் நுட்பமான தொழில்நுட்பத்தையும், அறிவுசார் சொத்தையும் பெறுவதற்கு சீனா பலவகைகளிலும் முயன்று வருகிறது. இதன்மூலம் அதன் ராணுவத்தை நவீனப்படுத்துவதே சீனாவின் நோக்கம்.
சீனாவின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் நீண்டகால பொருளாதார நலன்கள் மற்றும் அமெரிக்கர்களின் நலனை பாதிக்கக்கூடியதாகும்” என்றுள்ளார் டொனால்ட் டிரம்ப்.