வாஷிங்டன்:

பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கனில் அமெரிக்க படைகள் நீடிப்பது குறித்த தனது அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதற்கு எந்த காலக்கெடுவும் விக்க முடியாது. , அமெரிக்கப்படைகள் அந்நாட்டில் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும். தவிர, மேலும் 4000 அமெரிக்க வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

பாகிஸ்தானுக்கு பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவியை அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனால் நாங்கள் எதிர்த்து போராடி வரும் ஆயுதப் போராளி குழுக்களுக்கு அந்த நாடு புகலிடம் அளித்து வருகிறது.

`நாகரிகம், ஒழுங்கு மற்றும் அமைதி ஆகியவற்றை பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டிய நேரம் இது” என்று பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளார் டிரம்ப்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் தொடர்ந்து பாகிஸ்தான் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் அதிபர் டிரம்ப்பும் அதே பாணியில் எச்சரித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு டிரம்பின் பேச்சுகள் அவரது தனிப்பட்ட கருத்துகள் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை வெளிப்படையாக அவர் பாகிஸ்தானை தாக்கிப் பேசியுள்ளார். ஆகவே எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கான அமெரிக்க உதவிகள் குறைக்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் இந்திய துணைக்கண்டத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், இந்த சூழலை இந்தியா தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக்கொள்ளப்போகிறது என்பதையும் கவனிக்க வேண்டும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.