டிரம்ப் விருந்துக்கு எடப்பாடிக்கு அழைப்பு : சோனியாவுக்கு அழைப்பு இல்லை

டில்லி

நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் கலந்துக் கொள்ள சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கவில்லை

நாளை இந்தியாவுக்கு தனது குடும்பத்துடன் வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அகமதாபாத் நகருக்குச் செல்கிறார்.  அங்கு அவர் நமஸ்தே டிரம்ப் என்னும் நிகழ்வில் க்லந்துக் கொள்கிறார்.  அத்துடன் அவர் தாஜ்மகால், காந்தி ஆசிரமம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டில்லியில் நாளை மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை அன்று பல நிகழ்ச்சிகளில் டிரம்ப் கலந்துக் கொள்கிறார்.   அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் குடியரசுத் தலைவர் தனது மாளிகையில் இரவு விருந்து அளிக்க உள்ளார்.  இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இந்த விருந்துக்கான அழைப்பு அனுப்பப்படவில்லை.    இது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தி அளித்துள்ளது.  காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “பிரதமர் மோடி அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் ஹவ்டி மோடி நிகழ்வில் பங்கேற்றார்.

அந்நிகழ்வுக்கு ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.   இஙு எதிர்க்கட்சி தலைவருக்கு அழைப்பு அனுப்பவில்லை.  இதெல்லாம் எவ்விதமான ஜனநாயகம்” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எதிர்க்கட்சியினரை புறக்கணிக்கும் மற்றொரு நிகழ்வும் நடைபெற உள்ளது.

டில்லி நகரில் உள்ள ஒரு  பள்ளியில் டிரம்ப் மனைவி மெலானியா மாணவர்களிடையே உரையாட உள்ளார். அந்நிகழ்வுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஆகியோர் பங்கு பெற இருந்தனர்.  தற்போது இருவருக்கும் அழைப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.