வாஷிங்டன் :

மெரிக்க அதிபர் தேர்தலில் மண்ணை கவ்விய டிரம்ப் தனக்கு பொதுமன்னிப்பு கிடைக்குமா என்று வெள்ளை மாளிகை அதிகாரிகளுடனும், சட்ட வல்லுனர்களுடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தனக்கு தானே பொதுமன்னிப்பு வழங்கிக்கொள்ள முடியுமா என்பது தெரியாத நிலையில், அதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசித்து வருகிறார்.

2016 தேர்தலின் போது ரஷ்யா உதவியுடன் ஆட்சி அதிகாரத்தை டிரம்ப் கைப்பற்றினார் என்ற குற்றச்சாட்டு உள்பட ஏராளமான குற்றசாட்டுகள் இவர் மீது எழுந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக தான் அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் என்று முன்னிலை படுத்திய டிரம்ப் தற்போது மன்னிப்பு குறித்து விவாதித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு வாரங்களில் மட்டும் தன் ஆஸ்தான சகாக்கள் 50 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி இருக்கிறார், இதில் இவரது மகள் இவான்காவின் மாமனார் குஷ்னர், பரப்புரை மேலாளர் மனபோர்ட், அரசு துறை ஒப்பந்ததாரர்கள், சட்ட ஆலோசகர்கள் ஆகியோர் அடங்குவர்.

ஆட்சியை விட்டு வெளியேறும் அமெரிக்க அதிபர்கள் தனக்காக பல வழக்குகளை சந்திப்பவர்களை, தன் பதவிக்காலம் முடியும் நேரத்தில் மன்னிப்பளித்து அனைத்து வழக்குகளிலிருந்தும் அவர்களை விடுவிப்பது அமெரிக்க வரலாற்றில் புதிதல்ல என்றபோதும், கடந்த நான்கு ஆண்டுகளில் 90 க்கும் அதிகமானோருக்கு கருணை அடிப்படையில் டிரம்ப் மன்னிப்பு வழங்கி இருப்பது விவாதத்திற்கு உரியதாக இருக்கிறது.

இந்நிலையில், கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குவதற்கு அதிபருக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு தானே மன்னிப்பு வழங்கிக்கொள்ள முடியும் என்று கூறிவரும் டிரம்ப், அதனால் ஏற்பட இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து கருத்து கேட்டு வருகிறார்.

அதற்கு மாற்றாக, டிரம்ப் தனது பதவியை ராஜினாமா செய்வதன் மூலம், அதிபர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் துணை அதிபர் மைக் பென்ஸை கொண்டு தனக்கு மன்னிப்பு வழங்க ஏற்பாடு செய்யலாம் என்றும் அதில் ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னுதாரணமாக வாட்டர்-கேட் ஊழலில் சிக்கிய அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கு மன்னிப்பு வழங்கிய விவகாரத்தை கூறும் அரசியல் விமர்சகர்கள், டிரம்ப் தனக்கு மன்னிப்பு வழங்கிக்கொள்ளும் பட்சத்தில் அது மற்றுமொரு அலங்கோல ஆட்சிக்கு உதாரணமாக அமெரிக்க வரலாற்றில் இடம்பெறும் என்றும் கருதுகின்றனர்.

இன்னும், இரண்டு வாரங்களில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், வரவிருக்கும் நாட்கள் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த இருப்பது மட்டும் நிச்சயம்.