டிரம்ப் தெரசா மே சந்திப்பில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை: அமெரிக்க தூதர் தகவல்
லண்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரசாமே உடனான சந்திப்பின்போது, பிரிட்டனுடன் விரைவான வர்த்தக ஒப்பந்தம் குறித்து முடிவு செய்யப்படும் என்று அமெரிக்க தூதர் கூறி உள்ளார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தம் குறித்து அமெரிக்காவும் பிரிட்டனும் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் பிரிட்டனுக்கான அமெரிக்க தூதர் ராபர் வூடி ஜான்சன் ( Robert “Woody” Johnson) தெரிவித்து உள்ளார்.
மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, அங்கு அவர் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேவையும், இரண்டாம் எலிசபெத் ராணியையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து பிரிட்டன்-அமெரிக்க நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த சாத்தியக் கூறுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் தங்களது சந்திப்பில் ஆலோசனை நடத்துவார்ள் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பெல்ஜியத்தில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில்அமெரிக்க அதிபரும், பிரிட்டன் பிரதமரும் சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் இந்த சந்திப்பு இங்கிலாந்தில் வரும் 12ந்தேதி நடைபெற உள்ளது.
பிரிட்டன் வரும் டிரம்ப் பிரதமர் தெரசா மே உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், வின்ட்சர் கோட்டையில் ராணி எலிசபெத்தைச் சந்தித்து பேச இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து ஆக்ஸ்போர்டுக்கு அருகிலுள்ள மாளிகையில், பிரிட்டன் வணிகத் தலைவர்களுடன் விருந்துடன் நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் பிரிட்டன் வருவதற்கு அங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருவதாகவும், இதன் காரணமாக திட்டமிடப்படாத ஆர்ப்பாட்டங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. டிரம்பின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக பல இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் ஜனவரியில் ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர், பிரிட்டனுக்கு முதன்முதலாக விஜயம் செய்வது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து வரும் 16 ம் தேதி ஃபின்லாந்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.