அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியா வரும் டிரம்ப் : சுப்ரமணியன் சாமி தாக்கு

புவனேஸ்வர்

மெரிக்க அதிபர் டிரம்ப் தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியா வருவதாகவும் அதனால் இந்தியாவுக்குப் பயனில்லை எனவும் சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி தொடர்ந்து ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் குறித்த தனது வெளிப்படையான கருத்துக்களால் சர்ச்சையைக் கிளப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.   குறிப்பாகப் பொருளாதார மந்தநிலை குறித்து அவர் விமர்சித்த போது  ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்த நூற்றாண்டின் மிக மோசமான செயல் எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் புவனேஸ்வர் நகரில் ஒரு நிகழ்வில் சுப்ரமணியன் சாமி கலந்துக் கொண்டார்.  அவர் தனது உரையில், “இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருவதால் நமக்கு எந்த பயனும் கிடையாது.   அவருடைய பயணம் அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்த நடத்தப்படுவது ஆகும்.  அதுவே அவருடைய முழு நோக்கமாகும்.

குறிப்பாக அமெரிக்காவை வலுப்படுத்த சில பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம்.  இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் உயரும்.   நாம் வாங்கும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் நாம் பணம் செலுத்தி வாங்குகிறோம்.  டொனால்ட் டிரம்ப் எதையும் இலவசமாக அளிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.