வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், அரசுமுறை பயணமாக பிரிட்டன் வரவுள்ள நிலையில், அவரின் கடும் விமர்சகரான மேகன் மார்கலை சந்திக்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்கல் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அவர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிகையாகவும் பணியாற்றியுள்ளார். இவர் வெளிப்படையாக பேசக்கூடிய பெண்ணியவாதி.

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரியை ஆதரித்துப் பேசியவர் மேகன். அப்போது, டிரம்ப் ஒரு “பெண்ணின வெறுப்பாளர்” என்ற கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தியிருந்ததோடு, டிரம்ப் வெற்றிபெற்றால், தான் அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், மேகனின் இந்தக் கருத்தை “அழுக்கானது” என்று விமர்சித்திருந்தார் டிரம்ப். டிரம்பின் பிரிட்டன் பயணத்தின்போது, அரச குடும்பத்தின் ஒரு உறுப்பினரான மேகனை, அவர் சந்திக்கமாட்டார் என்றே தகவல்கள் கூறுகின்றன.

ஏனெனில், மேகனுக்கு குழந்தைப் பிறந்துள்ளதால், ‍அவர் மகப்பேறு விடுமுறையில் இருப்பதால், டிரம்புடனான சந்திப்பு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.