Random image

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கத் தகுதியற்றவர் டிரம்ப் : மிச்செல் ஒபாமா சாடல்

நியூயார்க் : 

 

வம்பர் மாதம் 3 ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார், இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடென் அதிபராகவும், இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் போட்டியிடுகின்றனர்.

அதிபராகப் போட்டியிட தேவையான நிதி இல்லாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகிய கமலா ஹாரிஸை துணை அதிபராக போட்டியிட ஜோ பிடென் கடந்த வாரம் வாய்பளித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஆசியர்கள் , ஆப்ரிக்க மக்கள் உள்ளிட்ட கறுப்பினத்தவர் இடையே ஆதரவு பெருகிவருவதோடு தேர்தலுக்கான நிதியும் குவிந்துவருகிறது.

“VOTE” என்ற வாசகம் பொருந்திய நெக்லஸ் அணிந்திருந்த மிச்செல் ஒபாமா

இந்நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸை ஆதரித்து தேசிய அளவிலான மாநாட்டிற்கு ஜனநாயகக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது, கொரோனா வைரஸ் காரணமாக இந்த மாநாட்டை நான்கு நாட்களுக்கு இணையதளம் மூலம் நடத்த முடிவு செய்து, நேற்று இதன் துவக்க மாநாடு நிகழ்ந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை  அதிபராக இருக்கத்  தகுதியற்றவர் என்றும் ஒரு ஜனாதிபதி எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மாநாட்டில் மிச்சேல் ஒபாமா பேசியதாவது :

“என்னால் இயன்றவரை நேர்மையாகக் கூறவேண்டுமென்றால் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு தவறான ஜனாதிபதி, ஜனாதிபதிக்கான வேலையைச் செய்யவும் அதைத் தன்னால் செய்யமுடியும் என்பதை நிரூபிக்கத்தேவையான வாய்ப்பை பெற்றபோதிலும் அதனை அவர் செய்ய தவறிவிட்டார். அவர் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்.

 

ஒற்றுமை சீர்குலைக்கப்பட்ட ஒரு தேசத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதற்கு மேலும் அவர்களால் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று நினைத்து இந்தத் தேர்தலில் நாம் மாற்றத்தை செய்யாவிட்டால் அவர்களால் இதைவிட மோசமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.  குழப்பமான இந்த அரசியல் சூழலுக்கு முடிவு கட்ட இழந்த நம் வாழ்வை மீட்க டிரம்புக்கு எதிராக பெருந்திரளான மக்கள் வாக்களிக்க வேண்டும்.

 

ஜனாதிபதியின் வேலை சுலபமானதல்ல, தெளிவான சிந்தனை, தொலைநோக்குப் பார்வை, சிக்கலான மற்றும் சவாலான பிரச்சனைகளை கையாள்வது, நமது தேசத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த அகண்ட ஆழ்ந்த ஞானம், நியாயமான கோரிக்கைகள் ஆலோசனைகளை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேவை. நாட்டின் 33 கோடி மக்களின் உயிரையும் வாழ்வையும் மதிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

 

அதிபரின் வார்த்தைகள் வர்த்தகத்தை உயர்த்தத் தேவையான சக்தி படைத்தது, அவை போரையும் வரவைக்கும் அல்லது அமைதியையும் தரும். அவை நம்முள் தேவதைகளையும் வரவழைக்க முடியும் அல்லது நம்முள் மோசமான விளைவுகளைத் தரும் தீய உணர்வையும் எழுப்ப முடியும். அதிபராக நீங்கள் போலியான வழிகாட்டுதல்களை செய்ய முடியாது.

 

நம்மால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்ற மனநிலையில் நான்கு  ஆண்டுகளுக்கு முன் வாக்களிக்காமல் இருந்ததன் பலனை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 30 லட்சம் வாக்குகள் மட்டுமே  அவர்களை கடந்த முறை அதிபராக ஆக்கியது, அதன் விளைவை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

 

அமெரிக்க அதிபராக பாராக் ஒபாமாவும் துணை அதிபராக ஜோ பிடெனும் செயலாற்றியபோது  இருந்த அமெரிக்கா கடந்த நான்கு ஆண்டுகளில் தலைகீழாக மாறியுள்ளது.

 

கொரோனா வைரஸ் குறித்த தவறான புரிதலுடன் ஆரம்பத்தில் இருந்து அணுகியதால் 1,50,000 க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். நமது பொருளாதாரம் சீரழிந்து விட்டது, கோடிக்கணக்கான மக்கள் வேலையிழக்க காரணமாக உள்ளது. பலர் உடல் நலம் குன்றிவிட்டனர், உணவு மற்றும் வாடகைக்குச் சிரமப்படுகிறார்கள், பள்ளிகளைப் பாதுகாப்பாக திறப்பது குறித்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் பலர் குழப்பமடைந்துள்ளனர்.

 

பாராக் ஒபாமா மட்டுமல்ல, ரொனால்ட் ரீகன் மற்றும் ஐசனோவர் போன்ற ஜனாதிபதிகள் வழிவகுத்த சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து நாம் வெளியேறி உள்ளோம்.

 

ஜார்ஜ் ஃபிலாய்ட், பிரோனா டெய்லர் என்று நீண்டுகொண்டே செல்லும் அப்பாவி மக்கள்  கொல்லப்படும் பட்டியல்,  “கறுப்பினத்தவர்  வாழ்க்கையும்  முக்கியமானது என்ற உண்மையை நாட்டின் மிக உயர்ந்த அலுவலகமான வெள்ளை மாளிகை காற்றில் பறக்க விட்டிருப்பதாக அனைவராலும் ஏளனம் செய்யப்படுகிறது “.

 

ஆறுதலுக்காகவும் நாட்டில் நடக்கும் அநியாயங்களை தெரிவிக்கவும் வெள்ளை மாளிகையின் கதவுகளைத் தட்டும்போதெல்லாம், நமக்கு குழப்பமும், பிரிவினையும் தான் பச்சாதாபமில்லாமல் வழங்கப்படுகிறது.

 

அதுமட்டுமல்ல, அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்கும் இளைஞர்கள் அரசின் எதிரிகளாகவும் தேச துரோகிகளாகவும் பார்க்கப்படுகிறார்கள், அதேவேளையில் வெள்ளையினத்தவர்க்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்பட்டு கூண்டுகளில் அடைக்கப்படுவது அனைவரின் மனத்திலும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. அமைதியாக போராடுபவர்கள் மீது  போலீஸ் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டு   ரப்பர் குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு விளம்பரத்திற்காக புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

 

அடுத்த தலைமுறையினருக்கு அமெரிக்கா ஒரு காட்சிப் பொருளாக மாறிவருவது வேதனையளிக்கிறது. கொள்கை விஷயங்களில் மட்டுமல்ல, தன்மை சார்ந்த விஷயங்களிலும் குறைவான செயல்திறன் கொண்ட ஒரு நாடாக இருப்பது   மிகவும் எரிச்சலூட்டுகிறது. நம் மக்கள் அனைவரும் அன்பு மற்றும் சகோதரத்துவத்தில் சிறந்தவர்கள் என்பதை  ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காணலாம்.

 

ஜோ பிடென் எதையும் எளிதாகப் புரிந்து கொன்று வளர்ச்சிக்காக செயலாற்றக்கூடியவர், இந்த நாட்டிற்காக தன் வாழ்வை அர்பணித்துக்கொண்டவர்.

 

அவரை நியாயமான முறையில் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்த டிரம்ப் அணியினர், ஜனநாயகக் கட்சியினரை வாக்களிக்க விடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். நிர்வாகத்தைப் பயன்படுத்தி  வாக்குச்சாவடிகளை முடக்கவும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியும் குழப்பம் விளைவிக்கின்றனர். வாக்காளர்களை இடைமறிக்க ஆட்களை ஏவுகிறார்கள், இதுபோன்ற சூழ்ச்சிகளை சந்திப்பது நமக்கு புதியதல்ல.

 

டிரம்ப் அணியினரின் இந்த சதியை முறியடிக்க பெருந்திரளான மக்கள் ஜோ பிடெனுக்கு ஆதரவாக  தங்கள் வாக்குகளைச் செலுத்தி இந்த எதேச்சதிகார அரசை வழியனுப்ப வேண்டும்.”

இவ்வாறு மிச்செல் ஒபாமா அந்த மாநாட்டில் பேசினார்.