வாஷிங்டன்: வரும் புதன்கிழமையன்று காலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்குத்தான், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப், பிளாரிடா மாகாணத்தின், மேற்கு பாம் கடற்கரையிலுள்ள தனது இல்லத்திற்கு செல்வார் என்று கூறப்படுகிறது. காலையில் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படும் அவர், நண்பகலுக்குள் அங்கே சென்றுவிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

டிரம்ப் ஏற்கனவே தெரிவித்ததைப்போல், அடுத்த அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளமாட்டார் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஜோ பைடனின் பதவியேற்புக்கு முன்னதாக, பழைய அதிபருக்கும் புதிய அதிபருக்கும் இடையில், உரையாடல் நிகழாது என்றும் தகவல்கள் வருகின்றன.

சில தகவல்களோ, டிரம்ப், வரும் செவ்வாய்க்கிழமையன்றே, வெள்ளை மாளிகையை விட்டு நீங்குவார் என்று கூறுகின்றன.

அதேசமயம், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ், அவரது மனைவியுடன் கலந்துகொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.