Random image

புதிய அதிபர் ஜோ பிடனுக்கு விமானம் ஒதுக்காத டிரம்ப்: ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடனுக்கு டிரம்ப் விமானம் ஒதுக்காதது விமர்சனத்தை எழுப்பி உள்ளது.

அமெரிக்காவில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் வெற்றி பெற்றார். அவர் முறைப்படி ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்கிறார்.

அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் ஏதேனும் வன்முறையில் இறங்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக  பதவியேற்கும் ஜோ பிடனை வெளிப்படையாக விமர்சித்து வரும் டிரம்ப், பதவியேற்புக்காக வாஷிங்டனுக்கு வரும் பிடனுக்கு அரசாங்க விமானத்தை ஒதுக்கவில்லை.

பின்னர், வாடகை விமானத்தை அமர்த்திக் கொண்டு பிடன் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள பிரிவு உபச்சார வீடியோவிலும் பிடனுக்கு, டிரம்ப் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.