ஈரான் மீது ராணுவ தாக்குதலை அறிவித்த டிரம்ப் முடிவை மாற்றிக் கொண்டார் : அமெரிக்க ஊடகங்கள்

வாஷிங்டன்

நேற்று ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாகவும் அதன்பிறகு அதை மாற்றிக் கொண்டதாவும் விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தகராறு முற்றி வருகிறது.  சமீபத்தில் அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதில் இருந்து இந்த தகராறு மேலும் அதிகரித்துள்ளது.   இந்த நடவடிக்கையை டிரம்ப் மிகவும் கண்டித்துள்ளார்.  அவர் ஈரான் மிகப்பெரிய தவறை செய்துள்ளதகவும் ஈரான் போருக்கு தயாராக உள்ளதாக அறிவிக்கவே இதை செய்திருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்தார்.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரானின் முட்டாள்தனமான செய்கை என தாம் கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடோ விடம் தெரிவித்ததாக கூறி உள்ளார்.   இந்த விவரத்தை அவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட  பிறகு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விஷயம் அறிந்த வட்டாரங்கள் டிரம்ப் நேற்று இரவு ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகவும் அதன் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.   ஆனால் அவர்கள் டிரம்ப் தனது முடிவை மாற்றிக் கொண்டது குறித்த சரியான காரணம் தெரியவில்லை எனவும் கூறி உள்ளனர்.

இந்நிலையில் இந்த நடவடிக்கை வேண்டாம் என அமெரிக்க மாநில செயலர் மைக் பாம்பியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோர் அறிவுரை அளித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.   இந்த செய்தியை அமெரிக்க செய்தி ஊடகமான ‘தி நியுயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.