அமெரிக்க பணத்தில் தீவிரவாதத்தை வளர்க்கும் பாக் : ட்ரம்ப் குற்றச்சாட்டு

 

வாஷிங்டன்

தாங்கள் அளித்த நிதி உதவியைக் கொண்டு தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் கூறி உள்ளார்.

பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை ஊக்குவித்து வருவதாக உலகம் எங்கும் குற்றச்சாட்டு உள்ளது.    இது குறித்து இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பல முறை கருத்து தெரிவித்துள்ளார்.    இந்தியாவுக்கு வருகை புரிந்த அமெரிக்காவின் மாநிலச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனிடம் சுஷ்மா இது குறித்து விவாதித்துள்ளார்.   அதன் பின் ரெக்ஸ், “தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என அறிவித்திருந்தார்.

தனது டிவிட்டர் பதிவின் மூலம் உலகை கலக்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் பாகிஸ்தான் குறித்து பதிந்துள்ளார்.  அவர் தன் பதிவில், “கடந்த 15 வருடங்களாக அமெரிக்க அரசு 33 பில்லியன் டாலர் நிதி உதவி அளித்து முட்டாள் தனம் செய்துள்ளது.    அதற்கு பதிலாக பாகிஸ்தான் நமது தலைவர்களை முட்டாள்கள் என நினைத்து நாம் ஆப்கானிஸ்தானில் தேடி வரும்  தீவிரவாதக் குழுக்களை இந்த நிதி உதவி மூலம் வளர்த்துள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் குவாஜா ஆசிஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.  அதில் அவர், “ஆண்டவன் அருளால்  அதிபர் ட்ரம்ப் பதிந்துள்ள ட்வீட்டுக்கு  விரைவில் பதில் அளிக்கிறோம்.   அப்போது உண்மை எது கட்டுக்கதை என்பதை இந்த உலகம் அறிந்துக் கொள்ளும்’ என பதில் அளித்துள்ளார்.     அமெரிக்க அதிபரின் இந்த பதிவை ஒட்டி பாகிஸ்தான் பிரதமரும், வெளிநாட்டு அமைச்சரும் ஒரு அவசர ஆலோசனை சந்திப்பை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் தனது டிவிட்டர் பக்கத்தில், “அமெரிக்க அதிபர் பாகிஸ்தானின் தீவிரவாதப் போக்கைப் பற்றி தெரிவித்ததற்கும்  அந்நாட்டில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என மறைமுகமாக குறிப்பிட்டதற்கும் வாழ்த்துக்கள்.   அன்பு ராகுல் ஜி,   மோடிஜியின் அரசியல் தந்திரத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.  நீங்கள் எப்போது பாகிஸ்தானின் நாடகத்தை புரிந்துக் கொண்டு இந்திய ராணுவத்தை குறை கூறுவதை நிறுத்துவீர்கள்?   அல்லது இன்னமும்  பாகிஸ்தானுக்கு அரவணைப்பு அளித்து ஆறுதல் கூறப்போகிறீர்களா?”  என பதிந்துள்ளார்.