வாஷிங்டன்:

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மேற்காசியா பகுதியில் மத்தியதரைக்கடல் ஓரத்தில் அமைந்துள்ள சிறிய நாடு இஸ்ரேல்.  இஸ்லாமியர்கள் வாழ்ந்துகொண்டிருந்த இந்த அரபு  பகுதியில் வெகுகாலத்துக்கு முன் யூதர்கள் வாழ்ந்ததாக  கூறி இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. உகெங்கும் சிதறி வாழ்ந்த யூதர்களில் பலர் இங்கு வந்து வாழ ஆரம்பித்தனர். அமெரிக்க உதவியுடன் நடந்த இந்த செயலுக்கு அரபு நாடுகள் உட்பட இஸ்லாமிய நாடுகளும் இதர பெரும்பாலான நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனாலும் காலப்போக்கில் ஐ.நா. மன்றம், இஸ்ரேல் நாட்டை ஏற்றுக்கொண்டது. உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

ஆனாலும் இஸ்ரேல் நாடு குறித்தும் அந்நாடு ஆக்கிரமித்துள்ள அரபு நாட்டுப்பகுதி குறித்தும் சர்ச்சை தொடர்ந்து நிலவி வருகிறது.

இஸ்ரேல் ஆதிக்கத்தில் உள்ள அரபு பகுதிகளை மீட்டு பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்கும் போராட்டமும் தொடர்கிறது.

இந்த நிலையில் கடந்த கடந்த 1967 ம் ஆண்டு, அரபு பகுதி என கருதப்படும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் கைபற்றியது. அப்போது முதல்,  அந்த நகரின் உரிமை தொடர்பாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் நிலவி வருகிறது.

ஆனால் தனது நாட்டின் தலைநகரை டெல் அவிவ் வ நகரில் இருந்து ஜெருசலேத்துக்கு மாற்றியது இஸ்ரேல். நிர்வாக ரீதியான முக்கிய அலுவலங்களை இந்நகருக்கு மாற்றியது.

இதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஐ.நா. மன்றமும் இந்த மாற்றத்தை ஏற்கவில்லை. உலக நாடுகளும் ஏற்க மறுத்தன. தற்போது வரை, உலக நாடுகள் அனைத்தும் டெல்அவிவ் நகரில் அல்லது ஜெருசலேம் நகரத்துக்கு வெளியில்தான் தங்களது தூதரங்களை அமைத்துள்ளன.

இந்த நிலையில், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா ஏற்கப்போவதாக தகவல் வெளியானது.

இதற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

சவூதி அரசர் சல்மான், “இது இஸ்ரேலில் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.

“இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரித்தால், இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு துண்டிக்கப்படும்” என்று துருக்கி அதிபர் எர்டோகன்  எச்சரித்தார்.

மேலும், இது குறித்து விவாதிப்பதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பு மாநாட்டை 13ம் தேதி, துருக்கி அதிபர் எர்டோகன் கூட்டியுள்ளார்.

ஆனால், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரித்து அமெரிக்க அதிபர் நேற்று அறிவித்தார். மேலும் தற்போது டெல்அவிவ் நகரில் செயல்படும்  இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசேலம் நகருக்கு மாற்றப்போவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள், ‘‘இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை ஏற்று  அமெரிக்க தூதரகத்தை மாற்றுவது என்பது வரலாற்றை மாற்றியமைக்கும் முயற்சி அல்ல. நடைமுறை காரணங்களுக்காகவே இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. இஸ்ரேலின் முக்கிய அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஜெருசலேமில் செயல்படுகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் டெல் அவிவ் நகரில் செயல்படுவது சரியாக இருக்க முடியாது. அதேசமயம் இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று தெரிவித்தனர்.

அமெரிக்காவின் இந்த முடிவு உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.