அமெரிக்கா – வடகொரியா இடையேயான பிரச்சனைக்கு சீனாதான் காரணம்: டிரம்ப் குற்றச்சாட்டு

வடகொரியா உடன் அமெரிக்கா செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சீனாதான் சிக்கலை ஏற்படுத்துவதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையில் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை உலக நாடுகள் வரவேற்றதுடன்,  ஐ.நா. சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து வடகொரியா இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனைத்தொடரர்ந்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்ப்பியோ, வடகொரியாவுக்கு சென்று அங்குள்ள உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவர் பேச்சுவார்த்தையை முடித்துகொண்டு அமெரிக்கா திரும்பிய நிலையில், வடகொரிய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அணு ஆயுத ஒழிப்பில் அமெரிக்கா கேங்லீடர் போல செயல்படுவதாகவும், இது பல முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மதித்து கௌரவிப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.   குறிப்பாக எங்கள் கைக்குலுக்கலை அவர் மறக்க மாட்டார். அதே வேளையில், இந்த ஒப்பந்தத்தின் மீது அமெரிக்காவால் வர்த்தக தடை விதிக்கப்பட்டுள்ள சீனா ஆதிக்கம் செலுத்தும் என கருதுகிறேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.