வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க, தினமும்  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொசுவினால் வரும் மலேரியா காய்ச்சலுக்கு பல ஆண்டுகாலமாக கொய்னா மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தது.  தற்போதைய மருத்துவ முன்னேற்றம் காரணமாக கொய்னா மாத்திரைகள் காணாமல் போயின. ஆனால், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொய்னா மாத்திரை பலன் அளிப்பதாக கூறப்படுகிறது. இதை பிரெஞ்சு மருத்துவர்களும், ஐசிஎம்ஆரும்  உறுதி செய்துள்ளன.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்தியா மருந்து அனுப்ப வேண்டும் என செல்லமாக மிரட்டல் விடுத்தார். அதைத்தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்கா உள்பட 45 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  மாத்திரைகளை அனுப்பியது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தான் தினமும் கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  மாத்திரைகளை  உட்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.
எனக்கு கொரோனாவும், அதன் அறிகுறியும் இல்லை. ஆனாலும், கடந்த ஒன்றரை வாரமாக தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்கிறேன். இதோடு சேர்த்து ஜின்க் மருந்தையும் உட்கொள்கிறேன். ஏனென்றால், இது நன்மை தரும் என நினைக்கிறேன்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபணம் ஆகாத நிலையில், டிரம்ப், தான் தினமும் உட்கொள்கிறேன் என்று அறிவித்தது சர்ச்சையை எழுப்பி உள்ளது.
டிரம்பின் பேச்சுக்கு மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  மாத்திரைகளை  முறையின்றி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என உலக நாடுகளும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்று துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.