வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளுக்கு தாமதமாகவே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்கிறார். அதற்கான ஏற்பாடுகளில் வெள்ளை மாளிகை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் இதர வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. 10 நாட்களுக்குள் வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு விடும் என்று கூறப்பட்டது.

ஆனால், அவர்களுக்கு தாமதமாகவே தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

வெள்ளை மாளிகை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியை பின்னர் எடுத்துக் கொள்ளலாம். நான் தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் திட்டத்தில் இல்லை. ஆனால் பொருத்தமான நேரத்தில் ஊசி போட்டுக்கொள்வேன் என்று கூறி உள்ளார்.