வாஷிங்டன்

லங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு தப்பும் தவறுமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் செய்தி அளித்துள்ளார்.

இலங்கையில் கொழும்பு நகர் பகுதியில் இன்று தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதற்கு உலகெங்கும் உள்ள பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டரில் இரங்கல் செய்தி அளித்துள்ளார்.

அந்த செய்தியில் அவர் “ஸ்ரீலங்காவில் தேவாலயங்களிலும் ஓட்டல்களிலும் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலில் 138 மில்லியன் மக்கள் மரணமடைந்ததற்கும் 600 பேருக்கு மேல் படுகாயம் அடைந்ததற்கும் அமெரிக்க மக்கள் சார்பில்  வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் என்றும் உங்களுக்கு உதவ தயார்” என குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய இரங்கல் செய்தியின்படி மரணமடைந்தவர்கள் எண்ணிக்க 13.8 கோடி பேர் என பொருள் வருகிறது. இலங்கையில் உள்ள மொத்த மக்கள் தொகையே சுமார் 23 லட்சம் பேர்கள் மட்டுமே ஆகும். அதன் பிறகு அந்த டிவீட்டை நீக்கி விட்டு புதியதாக மற்றொரு டிவிட் பதிந்துள்ளார்.

அதில் அவர், “ஸ்ரீலங்காவில் தேவாலயங்களிலும் ஓட்டல்களிலும் நடந்த தீவிரவாத தாக்குதலில் 138 பேர் கொல்லப்பட்டு 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளார். அமெரிக்கா ஸ்ரீலங்காவின் மக்களுக்கு தங்கள் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.  நாங்கள் என்றும் உங்களுக்கு உதவ தயார்” என மாற்றி பதிந்துள்ளார்.