ஹூஸ்டன்

மெரிக்க அதிபர் ஆக்கப் பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என ஹூஸ்டன் நகர காவல்துறைத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 25 ஆம் தேதி அன்று கருப்பினரான ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் கள்ள நோட்டு அளித்ததாக வந்த புகாரில் அவரை கைது செய்த காவல்துறை அதிகாரி டெரக் சாவின் காரை விட்டு வெளியே தள்ளி தனது காலால் கழுத்தை அழுத்தும் வீடியோ வெளியானது.  சுற்றிலும் இருந்து மற்ற மூன்று காவல்துறையினரும் அவரை தடுக்கவில்லை.   ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத் திணறி மரணம் அடைந்தார்.

இதையொட்டி அமெரிக்காவில் கடும் போராட்டம் நிகழ்ந்து வருகிறது.   பல வருடங்களாக கருப்பினர் அடக்குமுறையை சந்தித்து வருவதால் இந்த போராட்டம் வலுவடைந்து வருவதாக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.   பல இடங்களில் இந்த போராட்டத்தால் கடும் கலவரம் வெடித்து வருகிறது.   வெள்ளை மாளிகையில் நடந்த போராட்டம் கலவரமாக வெடித்து கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி தேசியப் பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

காவல்துறையினர் பல இடங்களில் போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் காட்சிகளும் நடந்து வருகின்றன.  அதே வேளையில் கருப்பின மக்களை காவல்துறையினர் கைது செய்யும் காட்சிகளும் நடைபெறுகின்றன.  அமெரிக்க அதிபர் டிரம்ப் போராட்டக்காரர்கள் அத்து மீறுவதை தம்மால் பொறுக்க முடியாது எனக் கோபத்தைத் தெரிவித்தது போராட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து ஹூஸ்டன் காவல்துறைத் தலைவர் ஆர்ட் அசிவெடோ அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் சி என் என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போராட்டத்தில் மிகவும் பொறுப்பற்று நடந்துக் கொள்கிறார்.  அவர் ஏதாவது ஆக்கப்பூர்வமாகச் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்கலாம்..

 இது அவர் தனது ஆளுமையைக் காட்டும் நேரம் இல்லை என்பதை அவர் உணர வேண்டும்.  மக்கள் தற்போது இரக்கத்தையும் பலகீனத்தையும் புரிந்துக் கொள்ள இயலாமல் குழப்பத்தில் உள்ளனர்.   அவர்களை உணரவைக்க தற்போது தலைமைக்கு பொறுமை மிகவும் அவசியமாகும்   அவர்கள் அத்துமீறுவதன் உண்மையான காரணத்தை அறிந்து அவர்களை அமைதி கொள்ள வைக்க முடியாமல் தனது பொறுமையின்மையை தற்போது தெரிவிப்பது மிகவும் தவறாகும்.

அமெரிக்க மக்கள் தற்போது காவல்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும்.  அதே வேளையில் காவல்துறையினரும் மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.  நாம் அனைவரும் மனித இனத்தவர் என்பதை காவல்துறையினர் மறக்காமல் செயல்பட வேண்டும்.  ஒற்றுமையை மக்களிடம் வளர்க்கத் தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுக்க வேண்டும்”என தெரிவித்துள்ளார்.