வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக அந்த அமைப்பு செயல்படுவதாக குற்றம்சாட்டி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர்.

கடந்த வாரமே, நிதியை நிறுத்த உள்ளதாக கூறியிருந்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த அறிவிப்பை அடுத்து, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதனோம், தயவுசெய்து கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். கொரோனாவிலிருந்து அரசியலை தனிமைப்படுத்துங்கள். ஆபத்தான வைரஸை வீழ்த்த ஒற்றுமை மிக முக்கியம் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் தகவல்களைப் பெறவும், கண்காணிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தவறிவிட்டது.

உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால், உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை எனது அரசு நிறுத்தி வைக்கிறது” என்றார்.

இந்த அறிவிப்பினை அடுத்து, முதற்கட்டமாக உலக சுகாதார அமைப்பிற்கு ரூ.3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.