வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் கிருமி நாசினியை ஊசி  மூலம் செலுத்தினால் கொரோனாவை தடுக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  அமெரிக்காவில் 8.86 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  இது அமெரிக்க மக்களிடையே கடும் பீதியை உண்டாக்கி இருக்கிறது.  எனவே அமெரிக்க விஞ்ஞானிகள் பாதிப்பைத் தடுக்க பல ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

அவ்வகையில் நடந்த ஒரு ஆய்வுக்குப் பிறகு அமெரிக்க விஞ்ஞான்ப் பாதுகாப்புத் துறை தலைவர் பில் பிரயான, “கொரோனா வைரஸ் சூடான இடங்களில் அதிக நேரம் உயிர் வாழாது.  எனவே மனிதனின் உடல் வெப்பம் மற்றும் நுரையீரல் வெப்பத்தை அதிகரித்தால் இந்த வைரஸ் அழிந்து விடும். குறிப்பாகச் சூரிய வெளிச்சத்தில் கொரோனா வைரஸ் உயிர் வாழாது” எனத் தெரிவித்திருந்தார்

அமெரிக்க அதிபர் டிரம்ப், “பில் பிரயான் சூரிய ஒளியில் கொரோனா வைரஸ் உயிர் வாழாது என தெரிவ்த்துளார். ஆனால் உடலுக்குள் சூரிய ஒளியைக் கொண்டு வருவது எப்படி என எனக்குத் தெரியவில்லை.   ஒருவேளை அல்டிரா வயலட் போன்ற சக்திவாய்ந்த ஒளியை  உடலுக்குள் செலுத்தி கொரோனாவை தடுக்கலாம்.  அதாவது தோல் மூலமாக அல்லது வேறு விதமாக உடலுக்குள் இத்தகைய ஒளியைச் செலுத்தி நோதனை செய்யலாம்.

கிருமி நாசினிகள் அனைத்தையும் ஒரு நிமிடத்தில் அழித்து விடுவதை நான் பார்த்து இருக்கிறேன்.  எனவே ஊசி அல்லது வேறு விதமாக மனித உடலுக்குள் கிருமி நாசினியைச் செலுத்தி அதன் மூலம் நுரையீரலைச் சுத்தம் செய்யலாம்.   இதனால் நுரையீரலுக்கு ஒரு அற்புத சக்தி கிடைக்கும்.  இவ்வாறு சோதனை செய்து பார்க்கலாம்” என தெரிவித்தார்.

ஆனால் அவர் எவ்வித கிருமி நாசினியை பயன்படுத்தலாம் எனத் தனது யோசனையில் தெரிவிக்கவில்லை.

இது குறித்து உலக சுகாதார கொள்கை அமைப்பாளரும் மருத்துவருமான வின் குப்தா, “அதிபர் டிரம்ப் தெரிவித்த ஆலோசனை சரியானது இல்லை.  கிருமி நாசினி அல்லது சுத்திகரிப்பானை உடலுக்குள் ஊசி அல்லது வேறு எவ்விதமாகவும் செலுத்துவது பொறுப்பற்றதும் அபாயகரமானதும் ஆகும்.    இது தற்கொலை செய்துக் கொள்பவர்கள் வழக்கமாகச் செய்வதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.