வாஷிங்டன்: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் வகையில், குறிப்பிட்ட வெளிநாட்டுப் பணியாளர்களை தடுக்கும் வகையிலான புதிய விசா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு அடுத்த 2 நாட்களில் வெளியாகும் என்றுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்.

தற்போதைய உலகளாவிய கொரோனா பரவல் காலக்கட்டத்தில், அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தை கடும் சிக்கல்களை சந்தித்துவரும் நிலையில், அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பை பாதுகாக்கும் வகையில் இந்தப் புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப் கூறியுள்ளதாவது, “நாளையோ அல்லது அடுத்த 2 நாட்களிலோ, சிலவற்றை அறிவிக்கவுள்ளோம். அந்த அறிவிப்பில் மிகச்சில நீக்குதல்களே இருக்கும்.

சில பெரிய வணிகங்களை அமெரிக்கர்களுக்காகப் பாதுகாக்க வேண்டுமெனில், இந்தப் புதிய அறிவிப்புகள் தேவைப்படுகின்றன. குறிப்பிட்ட மனிதர்கள் அந்த வணிக வாய்ப்புகளை குறிவைத்து நீண்டகாலமாக வந்து கொண்டுள்ளனர். எனவே, இந்த அறிவிப்புகளின் மூலம் அவர்கள் பெரியளவில் கட்டுப்படுத்தப்படுவார்கள். குறிப்பிட்ட காலங்களுக்கு நாம் கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்றுள்ளார் டிரம்ப்.

அதேசமயம், இத்தகைய நடவடிக்கைகளை தவிர்க்குமாறு, பல பெரிய அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிபரை கேட்டுக்கொண்டுள்ளன.