வாஷிங்டன்

லக அரங்கில் அமெரிக்காவுக்கு உள்ள நற்பெயரை அதிபர் டிரம்பின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் அதலபாதாளத்தில் தள்ளுவதாக கூறப்படுகிறது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.  இதில் அமெரிக்காவில் பாதிப்படைந்தோர் மற்றும் மரணமடைந்தோர் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக உள்ளது.  இதுவரை அமெரிக்காவில் 5.60 லட்சத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்

இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  ஆயினும் அவர் ஆரம்பத்தில் சரியான முன்னெச்சரிக்கை எடுத்திருந்தால் இந்த அளவு பாதிப்பு இருந்திருக்காது எனப் பல அமெரிக்க ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  அதிபர் டிரம்ப் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்புச் செய்திகளை கருத்தில் கொள்ளவில்லை.  மேலும் அவை யாவும் புரளி என வர்ணித்தார்.

அதிலிருந்து அவர் பொறுப்பற்று நடந்துக் கொள்வதாக அமெரிக்க ஏடுகள் குறை கூறத் தொடங்கின.  அத்துடன் அவர் உயிர்காக்கும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்தத் தவறியதாகவும் மிகவும் தாமதமாக நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளதாகவும் மேலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன

ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிய்ரர் ஸ்டீபன் வால்ட், ”டிரம்ப் நிர்வாகத்தின் கொரோனா நடவடிக்கைகள் அனைத்தும் சரியான நேரத்தில் நடத்தப்படாததால் அமெரிக்கர்கள் தங்களுடைய கோடிக்கணக்கான பணத்தையும்  உயிரையும் இழந்தனர்.  ஆனால் அமெரிக்காவுக்கு அது ம்ட்டும் இழப்பு இல்லை.

இது வரை உலக அரங்கில் அமெரிக்காவுக்கு என ஒரு நற்பெயர் இருந்தது. ஆனால் தற்போது டிரம்ப் எடுத்துள்ள கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் அந்த நற்பெயரை அதலபாதாளத்தில் தள்ளி விட்டது.  இதற்கு உதாரணமாக ஜெர்மனி ஆர்டர் செய்திருந்த முக கவசங்களைத் தாய்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்ப வைத்ததை சொல்லலாம்.   இதை டிரம்ப் செய்ததாக அவர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் உலக மக்கள் உண்மையை அறிவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.