வாஷிங்டன் :

மெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக உலகத் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறிவருவம் நிலையில், ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது என்றும் அவரது வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவும் செவ்வாயன்று டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் வெளிவர துவங்கி ஒரு வாரம் ஆன நிலையில், இதுவரை மவுனம் காத்துவந்த டிரம்பின் இந்த முடிவால் பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனை வெற்றிகொண்ட டொனால்ட் டிரம்பிற்கு, பதவியேற்கும் முன் அவர் குடியேறப்போகும் வெள்ளை மாளிகையை சுற்றிப்பார்க்க அழைப்பு விடுத்த அப்போதைய அதிபரும் ஜனநாயக காட்சியைச் சேர்ந்தவருமான பாராக் ஒபாமா, அவரை கண்ணியத்தோடு நடத்தினார். மேலும், அவருக்கான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் முறையாக செயல்படுத்தினார்.

டொனால்ட் டிரம்ப், இதற்கு மாறாக, ஜோ பைடனின் வெற்றி செல்லாது என்று அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றதோடு அல்லாமல், அவருக்கு பாதுகாப்பு, உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளார், அதுதவிர பாதுகாப்பு செயலாளராக இருந்த மார்க் எஸ்பரை திங்களன்று பதவி நீக்கம் செய்தார்.

வாக்கு எண்ணிக்கையின் போதே அதை நிறுத்தும் விதமாக பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடர்ந்த டிரம்ப், வழக்கிற்கு போதுமான ஆதாரம் இல்லையென்று கூறி நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.

மேலும், தேர்தல் நாளில் இருந்து இதுவரை ஒரு வாரகாலமாக தேர்தல் வழக்கு குறித்தே ஆர்வம் காட்டிவரும் டிரம்ப், அதிபருக்குண்டான அன்றாட அலுவல்களை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது, இதுதவிர, இந்த வார இறுதியில் இருமுறை இவர் கோல்ப் விளையாட சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றம் சென்றாலும், வாக்குபதிவின் முடிவில் பெரிதும் மாற்றமிருக்காது என்று பல்வேறு தரப்பினர் கூறிவரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில், அதன் அதிபர் அது குறித்து சிறிதும் கவலைப்படுவதாக தெரியவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை தனது தோல்விக்கு பின் வெளியிட்டிருக்கும் பைசர் நிறுவனத்தை சாடிய டிரம்ப், தான் தோல்வியடைய இந்த நிறுவனம் தான் காரணம் என்று கூறிய நிலையில் தனது வெற்றி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தேர்தல் அலுவலகம் கூறிவிட்டதால் ஊகம் மற்றும் அனுமானத்தின் அடிப்படையில் விசாரணையை நடத்தக்கூடாது என்று டிரம்பின் வழக்கறிஞர் தனது கேவியட் மனுவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திக்கு :  மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் அரசியல் பண்பு…….

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறிவரும் டிரம்ப், இதுகுறித்து பல வழக்குகளை பதிவு செய்து, இதுபோன்ற குற்றம் எதுவும் நடக்கவில்லை என்று விசாரணை முடிவுகள் வந்த பிறகும், இப்படி ஒரு கேவியட் மனுவை போட்டிருப்பது, தேர்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ரிச்சர்ட் பில்கரை கோபமடையசெய்ததோடு, அவர், தான் இந்த மனுக்களை விசாரிக்கப்போவதில்லை என்றும் இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாகவும் இ-மெயில் அனுப்பியிருக்கிறார்.

அடுத்த அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க இருக்கும் நிலையில், டிரம்பின் இந்த வழக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறிய இன்னும் சில நாள் காத்திருக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் உண்மை.