பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்… வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் கோரிக்கை…

நியூயார்க்: அமெரிக்காவில்  நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தோல்வியை தழுவும் நிலையில் உள்ள அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நேற்று அமைதியாக முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில்  தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 74)  மீண்டும்  போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ( வயது 77) போட்டியிடுகிறார். ஜோ ஜோர்கென்சன் (லிபர்டேரியன் கட்சி), ஹோவி ஹாக்கின்ஸ், (கிரீன் கட்சி) மற்றும் 7 பேர் போட்டியிட்டாலும், டிரம்ப் ஜோ பைடன் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதிபர் தேர்தலுடன்  காங்கிரஸ் சபைக்கான தேர்தலும் நடைபெற்றது. அதன் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  தற்போது வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அங்கு அதிபர் தேர்லில் வெற்றி 270 வாக்குகள் பெற வேண்டிய நிலையில்,  ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 238 வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் 213 வாக்குகள் பெற்று ஜோ பைடனுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளார்.

அமெரிக்கா நாடாளுமன்றத்தில்  மொத்தம் 535 உறுப்பினர்கள் உள்ளனர். அதாவது காங்கிரசில் உள்ள செனட் சபையில் 100 செனட் உறுப்பினர்களும், பிரதிநிதிகள் சபையில் 435 பிரநிதிகளும் உள்ளனர். எந்த அவையில் எந்த கட்சி எவ்வள்வு உறுப்பினர்களை வெல்கிறது என்பதை பொறுத்தே சட்டங்களை இயற்ற முடியும். அதாவது புதிய சட்டங்களை அதிபர் இயற்ற வேண்டும் என்றால் இந்த செனட் மற்றும் பிரநிதிகள் சபையில் மெஜாரிட்டி இருக்க வேண்டும். இதனால் இங்கு அதிக இடங்களில் வெற்றிபெறுவது அவசியம் ஆகும்.

காங்கிரஸ் அவையில் பிரதிநிதிகளை 2 வருடங்களுக்கு ஒருமுறையும், செனடர்களை 6 வருடங்களுக்கு ஒருமுறையும் தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 செனட்டர்கள் வீதம் 100 செனட்டர்கள் உள்ளனர்.

மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிரநிதிகள் எண்ணிக்கை மாறுபடும். இந்த நிலையில் தற்போது நடந்துள்ள காங்கிரஸ் அவை தேர்தலில் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் செனட் சபை – ஜோ பைடனின் ஜனநாயக கட்சி 40 இடங்களில் வென்றுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி 37 இடங்களில் வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவை.


இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், பைடனால் என்னை வெற்றி கொள்ள முடியாது என்றவர், எதிர்பாராத மாகாணங்களில் கூட தனக்கு  வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது என்றவர் அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடப்பதாக குற்றம்சாட்டியதுடன், வாக்குகள் என்னும் பணியை நிறுத்த நீதிமன்றம் செல்வேன் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. டெக்சாஸ், ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். பென்சில்வேனியாவிலும் வெற்றி பெற்று வருகிறோம். பென்சில்வேனியா மாகாணத்தில் 64% வாக்குகள் கிடைத்துள்ளன.  புளோரிடா மாகாணத்தில் எதிர்பார்க்காத வெற்றி கிடைத்துள்ளது. பல்வேறு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறோம்.   பெரிய கொண்டாட்டத்திற்காக நாம் காத்திருக்கிறோம். வடக்கு கரோலினாவிலும் மிகப்பெரிய வெற்றியை குடியரசுக் கட்சி பெற்றுள்ளது. இன்னும் 7% வாக்குகளே எண்ணப்பட வேண்டிய நிலையில் நமக்கான வெற்றி உறுதியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்வேன். தேர்தலில் மோசடி நடப்பதால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நீதிமன்றத்தை நாட உள்ளோம்.,’ என்றார்.

முன்னதாக டிரம்ப் தனது டிவிட்டர்  தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சி சதி செய்ய நினைப்பதாக பதிவிட்டிருந்த நிலையில்,  அது  தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்என்று டிவிட்டர்  நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஜோபைடன்,  அதிபர் தேர்தலில் வெற்றி நம்பிக்கை உள்ளதாகவும், அதுவரை ஆதரவாளர்கள் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதைப் பற்றி நாங்கள் நன்றாக உணர்கிறோம். மேலும், இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பாதையில் நாங்கள் இருப்பதாக நம்புகிறோம் எனவும், இந்தத் தேர்தலில் வெற்றியாளரை அறிவிக்க இது எனது இடமோ டிரம்பின் இடமோ அல்ல. இது வாக்காளர்களின் இடம் என்றும் பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் எழுந்துள்ள சலசலப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.