வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலானது, டிரம்ப் குடும்பத்தை வரலாற்றின் குப்பைக் கூடையில் போட்டுவிட்டது என்று கடுமையாக சாடியுள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி.

அவர் கூறியுள்ளதாவது, “மக்களின் சபை அரசியல் காரணங்களுக்காக இழிவுபடுத்தப்படுகிறது. இந்த நிகழ்வானது, டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் வரலாற்றின் குப்பைக் கூடையில் போட்டுவிட்டது.

கலகக்காரர் என்ற பட்டத்துடனேயே, இனி வரும் காலங்களில் டிரம்ப் அறியப்படுவார். இப்படி ஒரு மோசமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது. ஆனால், இதிலிருந்து ஒரு மேலான மற்றும் நம்பிக்கையளிக்கும் விஷயம் நமக்கு கிடைக்க வேண்டும்.

அதிபரின் தரப்பில் எவ்வளவோ தவறான விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனால், இந்த விஷயம் பெரிய தவறாகப் போய்விட்டது. தற்போது, நாட்டின் நாடாளுமன்றம் தேர்தல் முடிவுக்கு நற்சான்று அளித்துவிட்டது.

எனது பெரிய கவனம் என்னவென்றால், நாட்டின் அதிகாரமானது வன்முறையற்று, ஒழுங்கான முறையில், பிரச்சினைகளின்றி கைமாற வேண்டும் என்பதுதான்” என்றுள்ளார் ஜார்ஜ் குளூனி.