கொச்சி வந்தடைந்தார் திருப்தி தேசாய்! உச்சக்கட்ட பரபரப்பில் கேரளா

டில்லி:

பரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நாளை (17ந்தேதி) நுழைவேன் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று சவால் விட்டுள்ள திருப்தி தேசாய் தனது குழுவினருடன் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

இதன் காரணமாக கேரளாவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.  அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மண்ட பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று  திறக்கப்பட உள்ள நிலையில், நாளை 17ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைவேன் என்று சமூக ஆர்வலரான  திருப்தி தேசாய் பகிரங்கமாக அறிவித்து இருந்தார். மேலும், தன்னை யாரும் தடுக்க முடியாது என்றும் சவால் விட்டுள்ளார்.

இதற்கு அய்யப்ப பக்தர்களிடையே கடுமையாக  எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், திருப்தி தேசாய்  இன்று காலை விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவர் கேரளா வருவதையொட்டி விமான நிலையத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசாய்,  எதிர்ப்பாளர்களால் நாங்கள் தாக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளதாகவும், எதிர்ப்பாளர்கள  வன்முறையை நாடக்கூடாது என்றும்,  நாம் அங்கு சென்றவுடன், பாதுகாப்பு நிலை  குறித்து அறிவோம் என்றும், அரசு எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால், மேற்கொண்டு செயல்படுவது குறித்து முடிவு செய்வோம் என்று கூறி உள்ளார்.

விமான நிலையம் வந்திறங்கிய திருப்தி தேசாய் தனது குழுவினருடன் விமான நிலையத்திலேயே அமர்ந்து தனது காலை உணவை முடித்தார்.  அதைத்தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் அவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

நாளை காலை சபரிமலை செல்ல உள்ளதாக கூறியுள்ள திருப்தி தேசாய் குழுவினருக்கு கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. கொச்சி விமான நிலையத்திலும் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் வெளியே வராத முடியாத நிலை நீடித்து வருகிறது.

திருப்தி தேசாய்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் ஈஸ்வர், சபரிமலை கோவிலுக்குள் அவர்களை நுழைவதில் கேரள மாநில மக்கள், இந்துக்கள், அய்யப்ப பக்தர்கள் தங்களது வலிமையை காட்டுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்மிக பூமியான சபரிமலையை  கலவர பூமியாக மாற்றுவதில் மாநிலஅரசும், இதுபோன்ற பெண்ணியக்க வாதிகளும்  திட்டமிட்டு செயல்படுவதாக கேரள பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

You may have missed