சென்னை,

டப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் திமுக வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் அசாதாரண சூழ்நிலை காரணமாக, எடப்பாடி அரசுக்கு எதிராக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றக்கோரி கடிதம் கொடுத்துள்ளனர்.

அதையடுத்து தமிழக எதிர்க்கட்சியான திமுக சார்பில் இரண்டு முறை ஆளுநரை சந்தித்து, எடப்பாடி அரசு சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி வலியுறுத்தினர்.

ஆனால், ஆளுநர் இந்த விஷயத்தில் இதுவரை எந்தவித முடிவும் அறிவிக்காமல் மும்பை சென்று விட்டார்.

இந்நிலையில், அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.