நம்பிக்கை வாக்கெடுப்பு: எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

 

சென்னை:

ட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியதற்கு எதிராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சட்டசபையில் கடந்த 18-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பு வலியுறுத்தியது. ஆனால் சபாநாயகர் தனபால் இதை நிராகரித்துவிட்டார்.

இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் அமளியில் ஈடுபட்டதாகவும், தன்னைத் தாக்கியதாகவும் சபாநாயகர் தனபால் தெரிவித்தார். பிறகு திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபை மார்ஷல் சீருடையில் வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக தி.மு.க. தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் கே. பாலு உள்ளிட்டோர் நம்பிக்கை வாக்கெடுப்பு முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த வாரம் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டசபை சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளைத் தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனால் வீடியோ காட்சிகளைத் தரக்கோரி சட்டசபை செயலருக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபை செயலாளர் ஜமாலுதீன், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும் அடுத்த விசாரணையின்போது, சட்டசபையில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்த வீடியோ பதிவுகளையும், சட்டசபை குறிப்புகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அடுத்த விசாரணை மார்ச் 10ந்தேதிக்குள்  நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.