பாட்னா,

பீகார் சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.

பீகாரில் லல்லு கட்சியின் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த முதல்வர் நிதிஷ்குமார், அடுத்த 16 மணி நேரத்திற்குள் பாரதியஜனதா ஆதரவுடன் மீண்டும் 6வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார்.அவருடன்,  துணை முதல்வராக பாஜகவைச்சேர்ந்த சுஷில் குமாரும் மோடியும் பதவி ஏற்றார்.

அதைத்தொடர்ந்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் திரிபாதி அவருக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து பீகார் சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று கூடியது.  இதில் நிதிஷ் குமார், தனது அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோரினார்.

அப்போது, லல்லு கட்சி உறுப்பினரான தேசுஸ்வி யாதவ், நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.

அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது.

பெரும்பான்மையை நிரூபிக்க 122 வாக்குகள் தேவை என்ற நிலையில், 131 வாக்குகள் பெற்று, நிதிஷ் மீண்டும் தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார்  சட்டசபையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 80 உறுப்பினர்கள்; காங்கிரஸுக்கு 27 என மொத்தம் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

நிதிஷ்குமாருக்கு ஜனதா தளக் கட்சியின் 71 எம்எல்ஏக்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 58 என 129 எம்.எல்.ஏக்க்கள் உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது,  நிதிஷ்குமாருக்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 108 வாக்குகளும் கிடைத்தன. 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாமதமாக வந்தால் அவர்கள் வாக்கு பதிவு செய்யவில்லை.

நிதிஷ்குமாருக்கு அவரது கட்சி எம்எல்ஏக்கள் உடன்  பாஜக, கூட்டணி எம்எல்ஏக்கள் வாக்களித்ததை அடுத்து அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.