சென்னை:

மிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் அதிமுகவின் வெற்றி உறுதியான  நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத்தேர்தல் வெற்றி – உண்மைக்கு கிடைத்த வெற்றி, உண்மை, நீதி எப்போதும் வெல்லும் என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபணமாகியுள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் கடந்த 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னணி வகித்து வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இருவரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

இதன் காரணமாக அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில்உ ள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் வெற்றியை  உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

“இந்த இடைத்தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க இடைத்தேர்தல் என்றும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள். இப்போது உண்மை தெரிந்த காரணத்தால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு அமோகமான வெற்றியை அளித்துள்ளார்கள் என்று கூறியவர்,  உண்மை, நீதி எப்போதும் வெல்லும் என்பதை நிரூபித்து உள்ளது என்றார்.

தர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பதை இந்த இடைத்தேர்தல் காட்டுகிறது. திமுக பொய்யை நம்பியதால் இரண்டு தொகுதிகளையும் இழந்துள்ளது.

மேலும், இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

கூட்டணி கட்சியினர் ஒவ்வொருவர் பெயரையும் தனித்தனியாக தெரிவித்து நன்றி தெரிவித்தவர்,  தற்போதைய கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடரும் என்றும் கூறினார்.