நிர்மலா தேவி

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்குத் திருப்ப முயன்றது தொடர்பான ஆடியோ வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.  இந்த விவகாரத்தைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயன்ற நிலையில்,  கல்லூரி முன் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கிடையே நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இன்னொரு புறம் ஆளுநர் உத்தரவின் பேரில் சந்தானம் ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வருகிறார்.

நிர்மலா தேவியின் வீடு

இந்த நிலையில் அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவி வீடு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில்  அந்த வீட்டில் கொள்ளை முயற்சி நடந்திக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டின் முன் கேட் பூட்டு உடைக்கப்பட்டு, வாசற் கதவை உடைக்கும் முயற்சியும் நடந்திருக்கிறது. ஆனால் கொள்ளையரின் எண்ணம் ஈடேறவில்லை.

விடியற்காலையில் வந்த கொள்ளையர்கள், கதைவை உடைக்க முடியாத நிலையில் விடிந்து மக்கள் நடமாட்டம் ஏற்பட்டதால் திரும்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பொருட்களை திருடும் நோக்கில் இந்த கொள்ளை முயற்சி நடந்ததா அல்லது முக்கிய ஆவணங்களை கைப்பற்ற நடந்த முயற்சியை என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.