மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி! தேவகவுடா

பெங்களூரு:

பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் பிரஸ் கிளப் சார்பாக சிறந்த சாதனையாளர் விருது முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்றுகொண்ட தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. பல ஆண்டு களுக்கு முன் பெங்களூரு நேஷனல் கல்லூரி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதை நான் காரில் அமர்ந்து கேட்டேன்.

அவர் பேச்சில் நாட்டின் முன்னேற்றத்திற்கான தொலைநோக்கு சிந்தனை இருந்தது என்றார்.. மேலும் ஒரு கருத்தை அவர் மக்கள் மன்றத்தில் பதிவு செய்தால், அதை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பார்.

ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி நேரத்திற்கு ஏற்றப்படி தனது பேச்சை மாற்றி கொண்டு பேசுகிறார்.

நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்றபோது, கருப்பு பணம் ஒழிப்பேன், வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியுள்ள இந்தியர்களின் பணத்தை மீட்பேன், ஊழல் இல்லாத நாட்டை அமைப்பதுடன், காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவேன், மேக் இன் இண்டியா திட்டத்தின் மூலம் தேசத்தை உலகின் முன்னணி நாடாக மாற்றுவேன் என்பது உள்பட பல வாக்குறுதிகளை கொடுத்தார்.

ஆனால், அவரது 30 மாத கால ஆட்சியில் அவர் கொடுத்த வாக்குறுதியில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றி இருக்கிறாரா? அவ்வாறு நிறைவேற்றி இருந்தால்,  உ.பி. சட்டமன்றதேர்தலில் அவர் எம்.பியாக வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் மூன்று நாட்கள் முகாமிட்டு பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார்.

மேலும்,  பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவதாக பெருமை பாராட்டுகிறார்கள்.‘

ஆனால்,  அரசியல்வாதியான எனக்கு தெரியும்.  கட்சிகள் நடத்தும் கூட்டம், மாநாட்டிற்கு மக்கள் எப்படி வருகிறார்கள் என்பது. சாமானிய மக்களுக்கு வேண்டுமானால் அது புரியாமல் இருக்கலாம். ஆனால் பிரதமர் கூட்டத்திற்கு மக்களை அழைத்து வர பணம் எங்கிருந்து வருகிறது என்பது மட்டுமே கேள்வியாகும் என்றார்.

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்லில் பாஜ வெற்றி பெற்றால் நாட்டில் மாநில கட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றார்.

நான்,  தற்போது நாட்டில் மூன்றாவது அணியை பலமான அணியாக  உருவாக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டுவருகிறேன் என்றும், அந்த முயற்சி இன்னும் ஈடேறவில்லை என்றும் கூறினார்.

அதே சமயத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜ கட்சிகளுக்கு போட்டியாக மூன்றாவது அணி பலமாக உருவாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். இதை நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் நான் செய்யவில்லை, அதை நான் விரும்பவும் இல்லை என்று மேலும் கூறினார்.

எனது விருப்பம் மாநிலத்தில் மஜதவை பலப்படுத்துவதுதான். நாட்டில் மேற்கு வங்க மாநிலத்தை தவிர, பிற மாநிலங்களில் மாநில கட்சிகள் பலமிழந்து வருகிறது. மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜியை தோற்கடிக்க பாஜ எவ்வளவு முயற்சித்தாலும் அது தோல்வியில் முடிந்து வருகிறது.

அதுபோல தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் பாஜவால் காலூன்ற முடியவில்லை என்றார்.

நாட்டின் பிரதமராக நரேந்திரமோடியை பாஜவினர் தேர்வு செய்ததாக பலர் நினைத்து கொண்டு உள்ளனர். இது உண்மையல்ல. அவரை பிரதமர் வேட்பாளராக 5 கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்வு செய்தது, அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முன் மொழிந்தது. அதன் பேச்சை தடுக்க முடியாமல் பாஜ தலைமை ஏற்றுகொண்டது.

தன்னை பிரதமராக்கிய 5 கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே  மோடி செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.