விருதுநகர்:

நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்படும் என கவர்னர் நியமித்துள்ள  விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்து உள்ளார்.

நேற்று முதினம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணையை தொடங்கிய சந்தானம் நேற்று அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தினார்.  அதைத்தொடர்ந்து அவரது குழுவில் உள்ள 2 பெண் அதிகாரிகளும் நிர்மலாதேவி மீது புகார் கூறிய 4 மாணவிகளிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

நேற்று 9 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும், மேலும் 12 பேரிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும்  போலிஸ் காவலில் உள்ள நிர்மலாதேவியிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சந்தானம், தற்போது போலீஸ் காவலில் உள்ள  நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

நீதிமன்றம் அனுமதி கிடைத்த உடன் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், இன்று மாலை  மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம்  புகார்கள் வாங்கப்படும் என்றும் கூறினார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், சிபிசிஐடி போலீஸ் காவலில் இருக்கும் நிர்மலாதேவியிடம் விசாரணை மேற்கொள்ள எனக்கு எந்த தடையுமில்லை என்று கூறிய நிலையில், இன்று நீதிமன்றத்தில் அனுமதி பெற்றே விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.