பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வாதாட மாட்டோம் என்பது தவறு!: வழக்கறிஞர் சுந்தர்ராஜன்

ண்மையில் சென்னை, அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு சிறுமி சிலரால் பாலியல்ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் முறைப்படியான விசாரணை, நேர்மையாக நடைபெற்று குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு சட்டப்படியான தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றம் செய்த ஒரு நபர் எந்தக் காரணத்துக்காவும் தப்பிவிடக்கூடாது. அதேபோல குற்றத்தில் தொடர்பில்லாத ஒரு நபர் அவரது பலவீனமான சூழல் காரணமாக பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறவும் கூடாது.

தற்போது நடைபெற்றது போன்ற சம்பவங்களில் குற்றம் சாட்டப்படுவோரை விசாரணை இன்றியே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கும் சமூக மனப்போக்கு பெருகி வருகிறது. குற்றம் சாட்டப்படுபவர்கள் நீதிமன்றத்திற்கு வரும்போது அவர்களை தாக்குவது முன்பு அரிதான நிகழ்வாக இருந்தது. சில பெண்ணுரிமை இயக்கங்களும், சில அரசியல் – கலாசார – பண்பாட்டு இயக்கங்களும் இவ்வாறான வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவோரை தாக்குவதை ஒரு சாகச செயலாக கருதத் தொடங்கினர். இது போன்ற சம்பவங்களுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம், இந்த சம்பவங்கள் பெருக காரணமாக அமைகிறது. மேலும் “நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்க மிக அதிக காலமாகும் – குற்றம் செய்தவர்கள் தப்பிவிடும் வாய்ப்புகள் அதிகம் – எனவே மக்கள் அளிக்கும் தண்டனை இது” என்பது போன்ற கருத்துகள் பரவி வருகின்றன.

தற்போது அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பு சிறுமி தொடர்பான சம்பவத்தில் வழக்கறிஞர்களே, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நீதிமன்ற வளாகத்தில் தாக்கியுள்ளனர். மேலும் இந்த குற்ற சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் செயல்படக்கூடாது என்று வழக்கறிஞர் சங்கம் ஒன்று தீர்மானம் இயற்றியுள்ளது.

தனிப்பட்ட நபர்களாக இருக்கும்போது பகுத்தறிவோடு சிந்திக்கும் நமக்கு, பலரோடு கும்பலாக இணையும்போது பகுத்தறிவும் – அதனால் விளையும் சிந்தனைத் திறனும் – சரியான முடிவெடுக்கும் திறனும் குறைந்துவிடுகிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உளவியல் உண்மை. ஆனாலும் கும்பலாக சேரும்போதும் நாம், தன்னிலை மறக்காமல் இருப்பதே நமது கல்விக்கும், பகுத்தறிவுக்கும், பக்குவத்திற்கும் அடையாளமாக அமையும்.

சட்டத்தில் பட்டம் பெற்று, பல வழக்குகளை நடத்தி அனுபவம் பெற்ற வழக்கறிஞர்களும், சாமானிய மக்களைப்போல கும்பல் மனநிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த கவலைக்குரியது.

சென்னை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்

ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்கு உள்ளாகும் நபர்களை கைது செய்வதும், விசாரணைக்கு உட்படுத்துவதும், வழக்கு தொடர்வதும் காவல்துறையின் கடமையாகும். அவை அனைத்தும் சட்டப்படி நடக்க வேண்டும். காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செய்யும் பல செயல்பாடுகள் மனித உரிமை மீறல்களாக மாறிவிடும்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் காவல்துறையினர், இதுபோன்ற சட்டரீதியான செயல்பாடுகளில் ஈடுபடும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனித உரிமைகளுக்கு இழுக்கு நேரக்கூடாது என்பது ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்தும் மனித உரிமைக் கோட்பாடாகும். அதை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே காவல் நிலையத்திலோ, சிறைக்கூடங்களிலோ குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டால் மனித உரிமை ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆணையங்களும் அதில் தலையிடுகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கடுமையாகத் தாக்குவதும், உடல் உறுப்புகளை நிரந்தரமாக சேதப்படுத்துவதும், அவ்வப்போது என்கவுன்டர் என்ற பெயரில் உயிரைப் பறிப்பதும் அன்றாட நிகழ்வாகி வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுப்பது மனித உரிமைச் சட்டங்களை படித்த வழக்கறிஞர்களின் அடிப்படைக் கடமையாகும்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் மனித உரிமைகளை காவல்துறையினர் மீறினால் குரல் கொடுக்க வேண்டிய வழக்கறிஞர்களே, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நீதிமன்ற வளாகத்தில் தாக்குவது என்பது வெட்கப்பட வேண்டிய செயல்பாடாகும். இதை வழக்கறிஞர்களின் அராஜகம், ஆணவம் என்றெல்லாம் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. அதேநேரம் ஆர்வக்கோளாறில் இவை நடைபெறுகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏனெனில் காவல்துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையிலும், குற்றப் பத்திரிகையிலும் எத்தனை சதவீதம் உண்மை இருக்கும் என்பது மற்ற துறையினரைவிட வழக்கறிஞர்களுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையில் மிகைப்படுத்தி பதிவு செய்யும் அம்சங்களைக் கொண்டே திறமையான வழக்கறிஞர்கள், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை வழக்கிலிருந்து விடுவிப்பது வழக்கம்.

ஆனால் தற்போதைய நிலையில் குற்ற வழக்கிலிருந்து விடுபடுவதற்கு ஒருவர் குற்றம் செய்யாத நிரபராதியாக இருந்தால் மட்டும் போதாது; அவர் திறமையான ஒரு  வழக்கறிஞருக்கு உரிய கட்டணத்தை செலுத்தும் பொருளாதார வசதி படைத்தவராகவும் இருக்க வேண்டும்.

தற்போதைய அயனாவரம் அடுக்குமாடி சிறுமி பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பொருளாதார வசதி மிக்கவர்களாக இருந்தாலோ, அரசியல் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தாலோ அவர்களுக்கு உதவி செய்ய ஒரு வழக்கறிஞர் பட்டாளமே முன் வந்திருக்கும். அரசியல், ஆன்மீகம், சமூகம், அரசு நிர்வாகப்பணி, சுற்றுச்சூழல் என வாழ்க்கையின் எத்துறையில் முறைகேடு செய்தவர்களுக்கும் – அவர்கள் செல்வந்தர்களாக இருந்தால் அவர்களுக்கு உதவி செய்ய வழக்கறிஞர்கள் வரிசையில் நிற்பார்கள். அப்போதெல்லாம் இந்த வழக்கறிஞர் சங்கங்கள் வாயைத் திறந்ததில்லை.

தமிழ்நாட்டின் காவல்நிலையங்களில்கூட பாலியல் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு, குற்றவாளிகள் சட்டப்படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாரும் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதில்லை. அது ஏற்கக்கூடிய அம்சமும் அல்ல.

தற்போதைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சமூகத்தின் எளிய பிரிவினர். பலர் அன்றாட வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களில் சிலரோ, பலரோ இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். அது விசாரணையில் தெரியவர வேண்டும். முறைப்படியான விசாரணை துவங்கும் முன்னரே அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்மானித்து, அவர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்ட உதவி செய்யக்கூடாது என்று ஒரு வழக்கறிஞர் சங்கம் தீர்மானம் இயற்றுவது சட்டத்திற்கே முரணானது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, தம்மை தற்காத்துக் கொள்ள சட்ட உதவி கோருவது அவரது அடிப்படை உரிமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதற்கு வசதி இல்லாத நபர்களுக்காகவே இலவச சட்ட உதவி மையத்தை அரசே நடத்துகிறது.

வழக்கறிஞர் சுந்தர்ராஜன்

“ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது” என்று மேடையில் பேசிவிட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கான சட்டரீதியான உரிமைகளை தடைசெய்யக் கோருவது குரூரமானதாகும்.

மக்களின் வரிப்பணத்தில் நடக்கும்  அரசு நிர்வாகத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தவர்களும், ஆடம்பர ஆன்மீக மையங்களை நடத்தி பாலியல் புகார்களில் சிக்கியவர்களும் நாட்டின் முக்கியமான வழக்கறிஞர்களின் ஆதரவுடன் வழக்கை சந்தித்து வருகின்றனர். அடுத்த வேளை உணவுக்கு ஓயாமல் உழைக்க வேண்டிய நிலையிலுள்ள ஏழை மக்களே சட்டம் என்ற சிலந்தி வலைக்குள் சிக்கி அல்லலுறுகின்றனர்.

மருத்துவம், பொறியியல் போன்றதல்ல சட்டம் சார்ந்த கல்விப்புலம். சட்டத்தை புரிந்துகொள்ளவும் – அதை முறையாக பயன்படுத்தவும் சமூகம் சார்ந்த சரியான புரிதல் தேவை. அவ்வாறு சட்டத்தை, சமூகத்தோடு இணைந்து புரிந்துகொண்ட பல வழக்கறிஞர்கள் உலகம் முழுவதும் சமூகத்தை கட்டமைக்கும் சிற்பிகளாகவும், சமூக நோய் தீர்க்கும் மருத்துவர்களாகவும் விளங்கியுள்ளனர். உலகின் பல அரசியல் புரட்சிகள் சட்டம் படித்தவர்களாலேயே சாத்தியப்பட்டுள்ளது.

ஆனால் நமது வழக்கறிஞர்களோ அரசியல் கட்சியின் அடிமட்டத் தொண்டனைப் போன்றும், திரைக்கலைஞர்களின் ரசிகர் மன்ற உறுப்பினர்களைப் போன்றும் நடந்து கொள்கின்றனர். இது சமூகத்தை மேலும் பின்னோக்கியே செலுத்தும்.

சட்டத்தின் வாசகங்களை மட்டுமே படிக்காமல், அந்த வாசகத்தின் பின்னுள்ள நோக்கங்களையும் படித்தால் மட்டுமே வழக்கறிஞர்கள் முழுமையான சட்ட நிபுணர்களாக விளங்க முடியும். சட்டம் என்பது ஒரு வலிமையான ஆயுதம். அதை முறைகேடாகவும் பயன்படுத்தி மக்களை அடக்கிஒடுக்க நினைக்கிறது, அரசு நிர்வாகம். மக்களுக்கான சட்டங்களை முழுமையாக உள்வாங்கி அவற்றின் நற்பலன்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையச் செய்வதே வழக்கறிஞர்களான நமது கடமை. அதற்கான பயணத்தில் இணைவோம்.