16 ஆண்டுகளுக்கு இதே நாளில், இதே நேரத்தல் (காலை 7 மணி அளவில்) தமிழகம் உள்பட பல மாநிலங்கள் மற்றும் நாடுகளை சூறையாடியது சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை. சுனாமி என்ற அந்த ஆழிப்பேரலை அந்த வயதில் ஏற்படுத்திய அச்சம் இன்னமும் தமிழக மக்களின் ஆழ்மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்கள்  25ந்தேதி மகிழ்ச்சியாக கொண்டிய நிலையில், அடுத்த நாளான 26ந்தேதி, இயற்கையின் கோர தாண்டவத்தால்  துயர நாளாக மாறியது.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமியாக உருவெடுத்து சென்னை உள்பட பல கடற்கரை பகுதிகளை சூறையாடியது.

உலகின் 11 நாடுகளில் பாதிப்பை உண்டாக்கிய இந்த பயங்கர நில நடுக்கம், ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. இது, இந்த நுாற்றாண்டின் நான்காவது பெரிய நிலநடுக்கம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த கோரத் தாண்டவத்தினால் தமிழ்நாடு, அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் இலங்கை, இந்தோனேஷியா நாடுகளில் லட்சக்கணக்கான மக்களை கடற்கரை மணலில் உயிரோடு புதைத்தது.

ஓடி விளையாடி கால் நனைத்த கடல் அலைகளும், ரசித்து ரசித்து பார்த்த கடலும், குழந்தைகள் ஆடிப்பாடி விளையாடி,  மணல் வீடு கட்டிய கடற்கரை இதுபோன்ற ஒரு கோர தாண்டவத்தை நிகழ்த்தும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அன்றைய தினம் காலை கடற்கரையில் வாக்கிங் போன்வர்கள், கடலுக்கு சென்றவர்கள், கடற்கரைப் பகுதியில் மீன்வாங்க சென்றவர்கள்,  அதிகாலையிலேயே கடற்கரை சூரிய உதயத்தை காணச்சென்றவர்கள் என ஏராளமானோர் சுனாமி பேரலைக்கு பலியானார்கள்.

கடற்கரை முழுவதும் ஓவென்ற எழுந்த  கூக்குரல், கடற்கரை பகுதிகளில் இருந்த மீனவ மக்களின் குடிசைகள், சிறுவீடுகள் போன்றவை சுனாமிக்கு பலியான நிகழ்வுகளும், மீனவ மக்களின் கண்ணீர் கதறல்கள் என  கடற்கரை பகுதிகளே சோகமயமானது. கடற்கரையில் இருந்த மீனவக் குடியிருப்புகள் அன்று தரையோடு தரையாக இருந்தது. இடிந்த கூரைகளையும், அடித்துச் செல்லப்பட்ட பொருட்களையும் தவிர சேதமடைந்த சில பொருட்களையும் பார்ப்போரின் மனதில் கட்டுக்கடங்காத சோதகமே எற்பட்டது என்பதை மறக்க முடியாது.

 சுனாமி என்ற ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்புகள் இன்றளவும் மக்களின் மனதில் ஆறாக வடுக்களாகவே தொடர்கிறது. சுனாமி சோகம் ஏற்பட்டு இன்று 20வது ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும்,  ஆழிப்பேரலையால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் அழுகையையும், உறவுகள், உடமைகள் என அனைத்தும் இழந்த அந்த மக்களின் கண்ணீர் கதைகளை எத்தனை வருடங்கள் கழித்தாலும் மறையாது என்பதே உண்மை.