ஜாகர்தா

கிழக்கு இந்தோநேசியாவில் நேற்று ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தை தொடர்ந்து விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

இந்தோநேசியாவில் பூகம்பம் உண்டாகும் போது சுனாமி அபாயம் ஏற்படுவது தொடர்ந்து நடைபெர்று  வருகிறது. கடந்த வருடம் சுலாவெஸ்ட் தீவில் 7.5 ரிக்டர் அளவில் ஒரு மாபெரும் பூகம்பம் உண்டானது. இதனால் 17 கிமீ ஆழமுள்ள பள்ளம் அந்த தீவில் உண்டானது.  அத்துடன் பாலு நகரத்தில் ஏற்பட்ட சுனாமியால் 4300 பேர் மரணம் அடைந்தனர்.

நேற்று இந்தோநேசியாவின் கிழக்கு பகுதியில் கடும் நிலநடுக்கம் உண்டானது. ரிக்டர் அளவு கோலில் 6.8 பதிவான இந்த பூகம்பத்தால் மக்கள் அச்சமுற்று வீடுகளை விட்டு வெளியேறினார்கள். பூகம்பத்தை ஒட்டி சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தோநேசிய கடற்கரை பகுதிகளில் வாழும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டனர்.

இந்நிலையில் அலைகளின் உயரம் அதிகபட்சமாக அரை மீட்டர் வரை மட்டுமே இருக்கும் என்பதால் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆயினும் பூகம்பம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மக்கள் கடும் அவதியில் சிக்கி உள்ளனர்.

இந்த பூகம்ப சேதம் குறித்த முழுத் தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.