திருப்பதி : வைகுண்ட வாசலை 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதி

திருப்பதி கோவில் வைகுண்ட வாசல் எனக் கூறப்படும் சொர்க்க வாசலை பக்தர்கள் வசதிக்காக 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் வைகுண்ட ஏகாதசி முக்கியமானதாகும்.  அந்த நேரத்தில் இரு தினங்கள் வைகுண்ட வாசல் என அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கமாகும்.  அந்த வாசல் வழியாகச் செல்லும் பக்தர்களுக்கு மறு பிறவி கிடையாது எனவும் அவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள் எனவும் நம்பிக்கை உள்ளது.

அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி நேரத்தில் சொர்க்க வாசல் திறப்பது வழக்கம் என்றாலும் திருப்பதி கோவில் சொர்க்க வாசல் வழியே செல்லுவது மிகவும் சிறப்பானது என பக்தர்கள் கருதுகின்றனர்.  எப்போதுமே கூட்டத்துடன் உள்ள திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று மேலும் பல மடங்கு பக்தர்கள் கூடுவார்கள்.

கூட்ட நெரிசலைக் குறைக்க வைகுண்ட வாசலை இந்த வருடம் 10 நாட்களுக்குத் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.  வரும் ஜனவரி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து இதை அமல்படுத்த ஆகம ஆலோசனைக் குழுவிடம் தேவஸ்தானம் அனுமதி கோரி உள்ளது.   இந்த அனுமதி கிடைத்த  பிறகு இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.