டிக்கட் வாங்காதவருக்கு கன்னத்தில் அறை : மும்பை பரிசோதகர் கைது

மும்பை

ரெயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்த பயணியை அடித்த பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையின் தாதர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை அஜித் பிரசாத் என்கிற பரிசோதகர் பயணிகளின் டிக்கட்டை பரிசோதித்து வந்துள்ளார்.    அப்போது தீரஜ் அகர்வால் என்னும் பயணியிடம் டிக்கட் கேட்டு இருக்கிறார்.   தீரஜ்ஜிடம் டிக்கட் இல்லை.   அதனால் அவரை ரெயில் நிலைய அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.   அங்கு தீரஜ் அபராதம் செலுத்த வேண்டும் என அஜித் கூறி உள்ளார்.

தீரஜ் அபராதம் செலுத்த மறுக்கவே இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் உண்டாகி உள்ளது.   தீரஜ்  அங்கிருந்து கோவத்துடன் வெளியேற முயன்றுள்ளார்.  அவரை தாவிப் பிடித்த அஜித் அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்துள்ளார்.  இதை தொடர்ந்து தீரஜ் போலிசாரிடம் அஜித் தன்னை தாக்கியதாக புகார் செய்துள்ளார்.

போலீசார் அஜித் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.   மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.   போலீசார் இன்று அஜித்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.