ஹவாலா முறையில் டிடிவி பண விநியோகம்: ஜெயக்குமார்

சென்னை,

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற ஹவாலா முறையில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் வருங்காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் விருப்பம். வாழ்க்கை என்பதே போர்தான். அரசியல் களம் என்பதே போர்தான் என்றார்.

மேலும், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவும் தினகரனும் கூட்டு சதியில் ஈடுபட்டனர். திமுக தலைமை இல்லாது, மு.க.ஸ்டாலின் சந்தித்த முதல் தோல்வி, ஆர்.கே.நகர் தோல்வி என்றார். எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண் போகணும். ஆனால் கடைசியில் ஸ்டாலின் நொல்ல கண்ணனாகிவிட்டார் என்றார்.

2ஜி அலைக்கற்றை, ஊழலை உலகிற்கே அடையாளம் காட்டியவர் அம்மா. 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி எம்.பி, அ.ராசா ஆகியோர் வெற்றி பெற்றதற்கு, தினகரன் வாழ்த்து கூறுகிறார் என்றால் அதிமுக தொண்டரை கேவலப்படுத்தும் செயலாக தினகரன் செயல் உள்ளது என்றார்.

எனவே, இதன் மூலம் திமுகவுடன் தினகரன் கூட்டு சேர்ந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. ஆர்.கே.நகர், இடைத்தேர்தலில் அதிமுக தோற்றது தற்காலிக பின்னடைவுதான்.  திருமங்கலம் பார்முலாவை அறிமுகப்படுத்தியது திமுக. இது ஜனநாயகத்தை கேளிக்கூத்தாக்கியது. மக்களுக்கு காசு கொடுத்தது திமுகதான்.

அந்த வகையில் திருமங்கலம் பார்முலா என்றால், ஆர்.கே.நகரில் ஹவாலா பாணியில் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 20 ரூபாய் நோட்டில் ஓட்டை கணக்கெடுத்து, ஹவாலா பாணியில் பண விநியோகம் நடத்தப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

தேர்தல் ஆணையம் இதுபோன்ற வாக்காளர்களை ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அவர்கள், தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை போன்ற கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.

இனி இந்தியாவிலேயே பில்லா – ரங்கா கலகக்காரர்கள்தான் இனி சட்டமன்ற தேர்தலில் நிற்க முடியும். அவர்கள் வராமல் இருக்க வேண்டுமானால் தேர்தல் ஆணையம் விழிப்போடு இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கார்ட்டூன் கேலரி